நில முறைகேடு புகாரில் சிக்கிய சிவசேனா மந்திரி சுபாஷ் தேசாய் ராஜினாமா


நில முறைகேடு புகாரில் சிக்கிய சிவசேனா மந்திரி சுபாஷ் தேசாய் ராஜினாமா
x
தினத்தந்தி 13 Aug 2017 3:18 AM IST (Updated: 13 Aug 2017 3:18 AM IST)
t-max-icont-min-icon

நில முறைகேடு புகாரில் சிக்கிய சிவசேனா மந்திரி சுபாஷ் தேசாய் தன் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். ஆனால் ராஜினாவை ஏற்க முதல்-மந்திரி மறுத்து விட்டார்.

மும்பை,

நடைபெற்று முடிந்த மராட்டிய மழைக்கால சட்டசபை கூட்டத் தொடரின் போது, பா.ஜனதாவை சேர்ந்த வீட்டுவசதி துறை மந்திரி பிரகாஷ் மேத்தா, குடிசை சீரமைப்பு திட்டத்தில் விதிமுறை மீறலில் ஈடுபட்டதாகவும், இதில் ரூ.500 கோடி வரை ஊழல் புரிந்ததாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அவரை பதவியில் இருந்து விலக்கவேண்டும் எனவும் அமளியில் ஈடுபட்டன.

இந்த பிரச்சினை ஓய்வதற்குள் மற்றொரு ஊழல் புகார் தலைதூக்கியது, சிவசேனா மூத்த தலைவரும் தொழில்துறை மந்திரியுமான சுபாஷ் தேசாய் மீதும் நில முறைகேடு குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. நாசிக்கில் தொழில் மேம்பாட்டு கழகத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை அதன் உரிமையாளர்களுக்கே மந்திரி சுபாஷ் தேசாய் சட்டவிரோதமாக வழங்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

எதிர்க்கட்சிகளின் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளாலும், தொடர் அமளிகளாலும் சட்டமன்றம், மேல்சபை கூட்டத்தொடர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதனால் ஆளும் பா.ஜனதா அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மேல்-சபை கூட்டத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், பிரகாஷ் மேத்தா மீது எதிர்க்கட்சிகள் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து லோக் அயுக்தா விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால் சிவசேனா மந்திரி சுபாஷ் தேசாய் மீது எந்த ஒரு விசாரணைக்கும் உத்தரவிடவில்லை.

இந்தநிலையில் நேற்று முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ இல்லமான ‘வர்ஷா’ விற்கு தொழில்துறை மந்திரி சுபாஷ் தேசாய் சென்று தேவேந்திர பட்னாவிசை சந்தித்தார். அப்போது அவர் தனது ராஜினாமா கடிதத்தை முதல்-மந்திரியிடம் கொடுத்ததார்.

இது குறித்து மந்திரி சுபாஷ் தேசாய் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் முதல்-மந்திரியை சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் வழங்கினேன். முறைகேடு புகாரில் நான் நிரபராதி என்று உறுதியாகும் வரை என்னை பதவியில் இருந்து விலக்குமாறு கோரிக்கை விடுத்தேன். ஆனால் அவர் என் ராஜினாமாவை ஏற்க மறுத்து, சுதந்திரமான விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். முடிவு வரும்போது அனைவரும் அதை பார்த்து தெரிந்துகொள்வார்கள். நான் தொடர்ந்து என் பணியை செய்யப் போகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story