கரும்பு நிலுவை தொகை வழங்கக்கோரி லாரிகளை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்
கரும்பு நிலுவை தொகை வழங்கக்கோரி கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் லாரிகளை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டில் கள்ளககுறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை எண்–1 உள்ளது. இந்த ஆலைக்கு பொரசப்பட்டு, சவேரியார்பாளையம், மைககேல்புரம், அரும்பராம்பட்டு, ஆற்கவாடி, சுத்தமலை, வடமாமாந்தூர், கடுவனூர், சங்கராபுரம், புதுப்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணககான விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த கரும்புகளை அறுவடை செய்து அரவைக்காக அனுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் கரும்புக்கான தொகை ரூ.30 கோடியை வழங்கவில்லை எனத் தெரிகிறது. நிலுவை தொகை வழங்கக்கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை அவர்களுக்கு நிலுவை தொகை வழங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் சேதுராமன் தலைமையில் நேற்று காலை சர்க்கரை ஆலை முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு கரும்பு நிலுவை தொகை வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். அப்போது ஆலைக்கு சர்க்கரை மூட்டை ஏற்ற வந்த லாரிகளை விவசாயிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்த ஆலை அதிகாரிகள் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருகிற 16–ந்தேதி இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.