2018–ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா சந்திக்கும்
2018–ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா சந்திக்கும் என்று பெங்களூருவில் தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
பெங்களூரு,
அங்கு அமித்ஷாவுக்கு கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, மத்திய மந்திரிகள் சதானந்தகவுடா, அனந்தகுமார், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், மேல்–சபை எதிர்க்கட்சி தலைவர் ஈசுவரப்பா, கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.
பின்னர் விமான நிலையத்தில் இருந்து மல்லேசுவரத்தில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு அமித்ஷா புறப்பட்டார். அப்போது விமான நிலையம் அருகே திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பா.ஜனதா தொண்டர்களை பார்த்து அமித்ஷா கையசைத்தார். அதன்பிறகு, மல்லேசுவரத்தில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு அமித்ஷா வருகை தந்தார். அங்கு வைத்து அமித்ஷாவுக்கு மாநில தலைவர் எடியூரப்பா மைசூரு தலைப்பாகை அணிவித்தார். மேலும் கட்சி தலைவர்கள் அவருக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்கள்.பின்னர் சட்டமன்ற தேர்தல் தொடர்பாகவும், கட்சியை பலப்படுத்துவது குறித்தும் மூத்த தலைவர்களுடனும், நிர்வாகிகளுடனும் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். முன்னதாக விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அமித்ஷா, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:–
கர்நாடகத்தில் 2018–ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக கட்சியை பலப்படுத்த வேண்டியது அவசியமாகும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக தான் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக பெங்களூருவுக்கு வந்துள்ளேன். கர்நாடகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜனதா அரசு ஊழலுக்கு எதிராக போராடி வருகிறது. வர இருக்கின்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.2018–ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா சந்திக்கும். எடியூரப்பா தலைமையில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும். 150 இடங்களில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க வேண்டும்.
தென்இந்தியாவில் பா.ஜனதா கட்சி காலூன்ற கர்நாடகம் தான் நுழைவு வாயில். மத்தியில் பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்த பின்பு மற்ற மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதுபோல, கர்நாடகத்திலும் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும்.பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி பயணம் தொடர வேண்டும். கர்நாடக சட்டசபை தேர்தல் மட்டுமின்றி 2019–ம் ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெறும். மத்தியில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமையும்.’’
இவ்வாறு அமித்ஷா பேசினார்.