வீடு தீப்பிடித்து பெண் பலி: தீயில் கருகிய கணவரும் சாவு
பெத்தநாயக்கன்பாளையம் அருகே வீடு தீப்பிடித்து பெண் பலியான சம்பவத்தில், தீயில் கருகிய கணவர் நேற்று உயிரிழந்தார்.
பெத்தநாயக்கன்பாளையம்,
பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 34). இவருடைய மனைவி செல்வி (30). இவர்களுக்கு சித்தார்த் (3) என்ற மகன் உள்ளான். கடந்த 7–ந் தேதி இரவு 9 மணிக்கு செல்வி வீட்டில் சமையல் செய்தார். பின்னர் கணவனும், மனைவியும் வீட்டை விட்டு வெளியே சென்றனர்.
அப்போது அடுப்பில் தீயுடன் இருந்த விறகை சிறுவன் சித்தார்த் பிடித்து இழுத்தான். இதனால் அருகில் இருந்த மண்எண்ணெய் பாட்டிலில் தீப்பிடித்தது. பின்னர் வீடு தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த பெருமாளும், செல்வியும் வீட்டிற்கு ஓடிவந்து குழந்தையை காப்பாற்றினார்கள். அப்போது அவர்கள் 2 பேரும் தீயில் உடல் கருகினர்.
கணவரும் சாவுஉடனே, அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி உயிரிழந்தார். பெருமாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பெருமாள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் இந்த சம்பவத்தில் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.