புதுவை அ.தி.மு.க.வில் மேலும் பிளவு


புதுவை அ.தி.மு.க.வில் மேலும் பிளவு
x
தினத்தந்தி 13 Aug 2017 5:00 AM IST (Updated: 13 Aug 2017 4:32 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமிக்கு மாநில செயலாளர் புருஷோத்தமன் ஆதரவு தெரிவித்ததன் மூலம் புதுவை அ.தி.மு.க.வில் மேலும் பிளவு வெடித்துள்ளது.

புதுச்சேரி,

தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. 2 ஆக உடைந்தது. சசிகலா தலைமையில் அ.தி.மு.க. அம்மா, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புரட்சி தலைவி அம்மா என 2 அணிகள் செயல்பட்டு வந்தன. அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில் கட்சிப் பணியில் இருந்து ஒதுங்குவதாக துணை பொதுச் செயலாளரான டி.டி.வி. தினகரன் அறிவித்தார். இரட்டைஇலை சின்னத்தை பெற தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்ட புகார் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட தினகரன் ஜாமீனில் வெளியே வந்தார். அவரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் சந்தித்துப் பேசினார்கள்.

அ.தி.மு.க. அம்மா அணியை வழிநடத்திச் செல்வதில் ஏற்கனவே மோதல் இருந்து வந்தநிலையில் தற்போது புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ததன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கும், டி.டி.வி. தினகரனுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

மேலும் பிளவு

புதுவை அ.தி.மு.க.வை பொறுத்தவரை முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமையில் புரட்சி தலைவி அம்மா அணி செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. அம்மா அணியில் மாநில செயலாளர் புருஷோத்தமன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகியோர் இருந்து வந்தனர்.

இந்தநிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான நிலையை மாநில அ.தி.மு.க. செயலாளர் புருஷோத்தமன் எடுத்துள்ளார். அவருக்கு ஆதரவாக சில நிர்வாகிகளும் உள்ளனர். இதன்மூலம் அ.தி.மு.க.வில் மேலும் பிளவு வெடித்துள்ளது.

இதுகுறித்து புருஷோத்தமன் கூறும் போது, ‘தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது. அவருக்கு எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன். அம்மாவின் எண்ணங்கள், திட்டங்களை அவர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறார். இது ஜெயலலிதா அமைத்து கொடுத்த ஆட்சி. இதனை காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒன்றாக இருந்து ஆட்சியை நடத்த வேண்டும் என்பது எனது எண்ணம். எடப்பாடி பழனிசாமிக்கு அனைவரும் முழு ஆதரவு அளிக்க வேண்டும்’ என்றார்.

கருத்து கூற மறுப்பு

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கர், அசனா ஆகியோர் ஏற்கனவே சென்னையில் டி.டி.வி. தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவர்களது நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.


Next Story