தேங்கி கிடக்கும் குப்பை, கழிவுகளால் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது பொதுமக்கள் புகார்


தேங்கி கிடக்கும் குப்பை, கழிவுகளால் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது பொதுமக்கள் புகார்
x
தினத்தந்தி 14 Aug 2017 3:30 AM IST (Updated: 13 Aug 2017 11:43 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.பி.பட்டினத்தில் தேங்கி கிடக்கும் குப்பை, கழிவுகளால் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

தொண்டி,

திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினத்தில் 3,000–க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் தினமும் இங்கு டன் கணக்கில் குப்பைகள் மற்றும் கழிவு பொருட்கள் ஆங்காங்கே கொட்டப்படுகிறது. ஆனால் இங்கு துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் தேங்கி கிடக்கும் குப்பை மற்றும் கழிவுகள் அப்புறப்படுத்துவதில்லை. இதன் காரணமாக வைரஸ் காய்ச்சல், தொற்றுநோய் பரவுகிறது இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் இதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் கூறுகின்றனர். இதுபற்றி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முகமது முக்தார் நிருபர்களிடம் கூறியதாவது:– திருவாடானை யூனியனில் எஸ்.பி.பட்டினத்தில் தான் அதிக மக்கள் தொகை உள்ளது. இதனால் இங்கு குப்பை மற்றும் கழிவுகள் தினமும் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனை அகற்ற துப்புரவு பணியாளர்கள் ஊராட்சியில் இல்லை. இதனால் இங்கு பல இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக ஒருவித துர்நாற்றம் தற்போது வீச தொடங்கி உள்ளது.

மேலும் தொற்றுநோய் பரவி வருகிறது. கடந்த ஆண்டுகளில் எஸ்.பி.பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டது. இதேபோல் தற்போது இங்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. சிலருக்கு டெங்கு அறிகுறி உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது பரவிவரும் காய்ச்சலை கட்டுப்படுத்தவும், மேலும் பலருக்கு வராமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யூனியன் அலுவலகத்திற்கு போன் செய்தால் யாரும் எடுப்பதில்லை.

மேலும் ஊராட்சி நிர்வாகம் முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. ஊராட்சி செயலரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு எஸ்.பி.பட்டினத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதுடன் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி பவுடர்களை தெளித்தும், தொற்று நோய்,வைரஸ்காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story