மனவளர்ச்சி குன்றிய மாணவ–மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்


மனவளர்ச்சி குன்றிய மாணவ–மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Aug 2017 4:15 AM IST (Updated: 14 Aug 2017 12:13 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் நடந்த மனவளர்ச்சி குன்றிய மாணவ–மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தொடங்கிவைத்தார்.

நாகர்கோவில்,

சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கும் அமைச்சகம் மூலம் தேசிய அறக்கட்டளை வாயிலாக, மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் சமூகத்தில் சமஉரிமைகள் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகர்கோவிலில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பேரணியை குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கொடியசைத்து தொடங்கி வைத்து, கலந்துகொண்டார். இதில் மனவளர்ச்சி குன்றிய மாணவ–மாணவிகள் பங்கேற்றனர்.

250–க்கும் மேற்பட்டோர்

மேலும் கார்மல், லிட்டில்பிளவர், புனித ஜோசப், டி.வி.டி மேல்நிலைப்பள்ளி, ஸ்காட் கிறிஸ்தவ பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் இருந்தும், சாந்திநிலையம், ஒய்யாசீஸ், நாஞ்சில் ஒய்யாசீஸ், அவிலா உள்ளிட்ட மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் இருந்தும் வந்திருந்த 250–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் பேரணியில் கலந்துகொண்டனர். இந்த பேரணி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி, டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியை அடைந்தது.

இதில் கலந்து கொண்ட மாணவ–மாணவிகள் ‘ஒருங்கிணைந்த கல்வி சமூக உயர்வுக்கு வழிவகுக்கும்’, ‘மாற்றுத்திறனாளிகள் பலம் பெற எல்லோருக்கும் சமூக கடமை உண்டு’ என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.

இதில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலா, மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி பிரம்மநாயகம், உதவி திட்ட அதிகாரி(அனைவருக்கும் கல்வி இயக்கம்) வில்வம் மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story