மதுக்கடையை மூடக்கோரி ஒப்பாரி வைத்து பெண்கள் 5–வது நாளாக போராட்டம்


மதுக்கடையை மூடக்கோரி ஒப்பாரி வைத்து பெண்கள் 5–வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 14 Aug 2017 4:30 AM IST (Updated: 14 Aug 2017 1:19 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே மதுக்கடையை மூடக்கோரி 5–வது நாளாக போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று பெண்கள் ஒப்பாரி வைத்து போரட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தர்மபுரி அருகே உள்ள மொன்னையன்கொட்டாய் பகுதியில் புதிய மதுக்கடை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு மதுக்கடை திறக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அந்த மதுக்கடையை மூட வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக ஏராளமான பெண்கள் மதுக்கடையை மூடக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று 5–வது நாளாக மதுக்கடை உள்ள பகுதியில் திரண்ட பொதுமக்கள் மதுக்கடையை மூடக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் எங்கள் குடும்பம் அழியாமல் இருக்க மதுக்கடை வேண்டாம் என்று ஒப்பாரி வைத்து மதுபாட்டில்களுக்கு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் போராட்டம் நடத்திய பெண்களிடம் மதுக்கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story