திருத்தணி அருகே தனியார் நிறுவன ஊழியர் அடித்துக்கொலை 6 பேர் கைது
திருத்தணி அருகே தனியார் நிறுவன ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருத்தணி,
திருத்தணியை அடுத்த செருக்கனூரை சேர்ந்தவர் நகுலன். இவரது மகன் ரமேஷ் (வயது 36). இவர் சோளிங்கரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். ரமேஷின் நண்பரான கார்த்திக் என்பவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதற்கு ரமேஷ்தான் காரணம் என நினைத்த அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கும், ரமேசுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் இது தொடர்பாக மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் நவீன் (23), அவரது தந்தை அண்ணாமலை (45) மற்றும் சிலர் ரமேஷை உருட்டுக்கட்டையால் அடித்து உள்ளனர். இதில் ரமேஷ் அவரது மற்றொரு நண்பர் கார்த்திக் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ரமேஷ் சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக திருத்தணி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து நவீன், ஆண்ணாமலை, கோவிந்தராஜ் (65), வனிதா (32), ராணி (30), சுந்திரசேகர் (32) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக செருக்கனூரில் மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க அங்கு திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.