ராசிபுரம் அருகே விடிய, விடிய கனமழையால் குட்டை நிரம்பியது
ராசிபுரம் அருகே நேற்று விடிய, விடிய பெய்த கனமழை காரணமாக குட்டை நிரம்பியது.
ராசிபுரம்,
ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விவசாய நிலங்கள், ஏரி, கிணறு, குட்டைகள் நிரம்பி வருகிறது. இதனிடையே ராசிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காக்காவேரி ஊராட்சி, வேலம்பாளையத்தில் நேற்று அதிகாலை கனமழை பெய்தது. சுமார் 3 மணி அளவில் பெய்ய தொடங்கிய இந்த மழை காலை 6 மணிக்கு மேலும் நீடித்தது.
இந்த பகுதியில் விடிய, விடிய பெய்த கனமழையால் தண்ணீர் பெருக்கெடுத்து அங்குள்ள மாதவன் குட்டைக்கு ஓடியது. மழைநீர் புகுந்ததால் இந்த குட்டை நிரம்பி தடுப்பணையில் தண்ணீர் வழிந்தோடியது. குட்டையில் இருந்து தண்ணீர் வெளியேற கால்வாய் வசதி இல்லாததால் அருகில் உள்ள விவசாயிகள் முத்து மற்றும் பெரியசாமி ஆகியோருடைய விவசாய நிலங்களுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த ராசிபுரம் தாசில்தார் ரத்தினம், வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது விவசாய நிலங்களுக்குள் மழைநீர் புகுவதை தடுக்க குட்டை மற்றும் மழைநீர் செல்லும் ஓடையை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து குட்டையில் இருந்து மழைநீர் விவசாய நிலங்களுக்குள் புகுவதை தடுக்கும் வகையில் அருகிலுள்ள 2 விவசாய கிணற்றுக்குள் தண்ணீர் செல்லும் வகையில் பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.