பலத்த மழை: மின்னல் தாக்கியதில் டி.வி. உள்பட எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது


பலத்த மழை: மின்னல் தாக்கியதில் டி.வி. உள்பட எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது
x
தினத்தந்தி 14 Aug 2017 4:30 AM IST (Updated: 14 Aug 2017 2:32 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் டி.வி. உள்பட எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைந்தன.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டையில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இரவு 10 மணியளவில் பெய்ய தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் சாலையில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களான திலகர் திடல், பொது அலுவலக வளாகம், தற்காலிக பஸ் நிலையம் உள்பட பல பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதைப்போல திருவரங்குளம், இலுப்பூர், அன்னவாசல், நார்த்தாமலை, ஆலங்குடி, கீரனூர், நமணசமுத்திரம், திருமயம், அரிமளம், ராயவரம், விராலிமலை, கறம்பக்குடி, வடகாடு, கீரமங்கலம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.

எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது

இந்த நிலையில் புதுக்கோட்டை நகராட்சி 6-வது வார்டு கம்மாளதெரு நேரு வீதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 44) என்பவரது ஓட்டு வீட்டில் மின்னல் தாக்கியது. இதில் வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் மின்னல் தாக்கியதில் திடீரென மின் அழுத்தம் அதிகமாகி வீட்டிற்குள் இருந்த டி.வி., குளிர்சாதன பெட்டி, மின்விசிறி உள்பட எலக்ட்ரானிக் பொருட் கள் அனைத்தும் பழுதடைந்தன. மேலும் அதே வீதியில் உள்ள சின்னையா, நஜீமா, கார்த்திக், செல்வி, ராணி, ராஜ்குமார் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளிலும் மின்னல் காரணமாக மின்அழுத்தம் அதிகமாகி வீட்டில் இருந்த டி.வி., மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் பழுதடைந்தன. இது குறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் கிராம நிர்வாக அதிகாரி சம்பவ இடத்துக்கு வந்து சேத மதிப்புகள் குறித்து விசாரணை நடத்தினார். 

Related Tags :
Next Story