மாநில அரசு மீண்டும் கோரிக்கை வைத்தால் ‘நீட்’ தேர்வுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வாய்ப்பு உள்ளது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


மாநில அரசு மீண்டும் கோரிக்கை வைத்தால் ‘நீட்’ தேர்வுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வாய்ப்பு உள்ளது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 14 Aug 2017 6:45 AM IST (Updated: 14 Aug 2017 3:55 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்கும் விவகாரத்தில் சாத்தியப்படக்கூடிய வகையில் மாநில அரசு மீண்டும் கோரிக்கை வைத்தால் அதை மத்திய அரசு பரிசீலித்து ஒரு சாதகமான முடிவெடுக்கும் வாய்ப்பு உள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கடலூர்,

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பிளஸ்–2 தேர்வு எழுதி மருத்துவ படிப்புக்காக காத்திருக்கும் மாணவர்கள், ‘நீட்’ தேர்வு எழுதியவர்கள் தாங்கள் எந்த நிலையில் கருதப்படுவார்கள் என்பதை ஒரு கேள்விக்குறியாகவே பார்த்துக்கொண்டிருப்பார்கள். தமிழகத்தில் பெரும்பாலான மாணவர்கள் மாநில பாட திட்டத்தில் படித்தவர்கள். இவர்களில் அதிகம்பேர் கிராமப்புற மாணவர்கள். அதிலும் மருத்துவ படிப்பு படிக்க ஆர்வம் இருந்தாலும் இடம் கிடைப்பது கடினம் என கூறி வருகிறார்கள்.

இது குறித்து நானும், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனும் தொடர்ந்து 2 வாரங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து இருக்கிறோம். மத்திய மந்திரிகளை சந்தித்து இருக்கிறோம். பிரதமரை பொறுத்தவரை கிராமப்புற மாணவர்களின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதன் அடிப்படையில் ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் மாநில அரசு சாத்தியப்படக்கூடிய வகையில் மீண்டும் கோரிக்கை வைத்தால் மத்திய அரசு அதை பரிசீலனை செய்து முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது.

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் வாகனங்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தாவிட்டால் அவற்றை அடித்து நொறுக்குவேன் என்று வைகோ கூறியிருப்பது அவருக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள எந்த கட்சிக்கும் நல்லதல்ல. அதிகாரத்தை கையில் எடுப்பதாக இருந்தால் அது எந்த நிலையில் கொண்டு விடும் என தெரியாது. எனவே இதுபோன்ற நிலைப்பாட்டை வைகோ தவிர்க்க வேண்டும்.

ஒரு திட்டம் கொண்டு வரப்படும்போது அந்த திட்டத்தால் தமிழக மக்களுக்கு நஷ்டம் இருக்கிறதா, லாபம் இருக்கிறதா, அடுத்த தலைமுறைக்கு வளர்ச்சி கிடைக்குமா, கிடைக்காதா என பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story