தனியார் காலணி நிறுவன ஊழியர் கத்தியால் குத்திக்கொலை


தனியார் காலணி நிறுவன ஊழியர் கத்தியால் குத்திக்கொலை
x
தினத்தந்தி 14 Aug 2017 4:37 AM IST (Updated: 14 Aug 2017 4:37 AM IST)
t-max-icont-min-icon

கே.வி.குப்பம் அருகே தனியார் காலணி நிறுவன ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

குடியாத்தம்,

கே.வி.குப்பம் அருகே தனியார் காலணி நிறுவன ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தப் பயங்கர கொலை சம்பவம் தொடர்பாக போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:–

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த கெம்மங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மகன் இளவரசன் (வயது 25). இவருடைய மனைவி காவியா. இருவருக்கும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன், மனைவி இருவரும் ஆம்பூரில் உள்ள தனியார் காலணி தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். இளவரசனுக்கு 18 வயதில் தம்பி ஒருவர் உள்ளார். அவர், தற்போது ஐ.டி.ஐ. படித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளவரசனின் தம்பி சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கே.வி.குப்பத்தை அடுத்த சின்னநாகல் மங்கானிப்பட்டியைச் சேர்ந்த நடராஜன் (35) என்பவர் தனது மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ஓரிடத்தில் இருவரும் கடந்து சென்றபோது மோட்டார்சைக்கிளும், சைக்கிளும் ஒன்றோடு ஒன்று உரசி கொண்டன.

அதில் ஆத்திரம் அடைந்த நடராஜன் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு வந்து, இளவரசன் தம்பியின் கழுத்தில் கத்தியை வைத்து, என்னுடைய மோட்டார்சைக்கிளை இடித்து விட்டு செல்கிறாயா? எனக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதில் பயந்துபோன இளவரசனின் தம்பி நேராக வீட்டுக்கு வந்து, தனக்கு நேர்ந்த சம்பவத்தை பெற்றோரிடமும், அண்ணன் இளவரசனிடமும் கூறினார்.

இந்தநிலையில் நேற்று மாலை 6 மணியளவில் இளவரசன் மற்றும் அவரின் வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ரஜினி (40) மற்றும் நண்பர்கள் நவீன், அரவிந்த் ஆகிய 4 பேரும் இரு மோட்டார்சைக்கிள்களில் மங்கானிப்பட்டிக்கு அருகே உள்ள ஒரு மதுபானக்கடைக்கு சென்றுள்ளனர். அதே மதுபானக்கடையில் இருந்து நடராஜன் தனது நண்பருடன் வெளியே வந்துள்ளார்.

அப்போது இளவரசன், நடராஜனிடம் சென்று, ‘என்னுடைய தம்பியிடம் ஏன் தகராறு செய்தாய்’? எனக் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், ஆத்திரம் அடைந்த நடராஜன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளவரசனின் முதுகில் சரமாரியாக குத்தினார். அப்போது நடராஜனை தடுக்க முயன்ற ரஜினியின் நெஞ்சிலும், தாடையிலும் கத்திக்குத்து விழுந்தது.

ரத்த வெள்ளத்தில் விழுந்த இருவரையும் சக நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு, இளவரசனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரஜினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கொலை சம்பவத்தைக் கேள்விப்பட்ட அவர்களுடைய உறவினர்கள் குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்குத் திரண்டனர். அங்கு, அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விஜயகுமார், சன்ராஜ், சுந்தரம் ஆகியோர் மேற்பார்வையில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அதைத்தொடர்ந்து இளவரசனின் பிணத்தை பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இருதயராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொலை சம்பவத்தால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கவும், மக்களிடையே பதற்றத்தைத் தணிக்கவும் கெம்மங்குப்பம், சின்னநாகல் மங்கானிப்பட்டி ஆகிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

இளவரசனை கத்தியால் குத்திக் கொலை செய்த நடராஜன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனலட்சுமி என்ற பெண்ணை கொலை செய்தது தொடர்பாக சிறைக்கு சென்றவர். பெரிய ரவுடி போல வலம் வந்த அவர் மீண்டும் ஒரு கொலையை அரங்கேற்றி உள்ளார். அவரை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story