வேலூரில் விடிய விடிய பெய்த மழையால் வீடு இடிந்து விழுந்தது


வேலூரில் விடிய விடிய பெய்த மழையால் வீடு இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 14 Aug 2017 4:45 AM IST (Updated: 14 Aug 2017 4:44 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய மழை பெய்தது.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. மழையால் வேலூர் அருகே கருகம்புத்தூர் பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் வற்றியது. இதனால் ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வெப்பத்தின் தாக்கத்தால் வெயிலூர் என்ற பொதுமக்களால் அழைக்கப்படும் வேலூரில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் குளிர்ச்சி நிலவுகிறது. மழையின் காரணமாக நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. வேலூரில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய காலை 8 மணி வரை நீடித்தது. இந்த மழையால் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம்போல் மழைநீர் தேங்கியது.

வேலூர் தொரப்பாடி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி காணப்படுகிறது. கன்சால்பேட்டை, சேண்பாக்கம், கருகம்புத்தூர் பகுதிகளில் மழை நீர் தேங்கியது. கருகம்புத்தூரில் பெய்த மழையினால் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள பவானி (வயது 53) என்பவரின் கான்கிரீட் வீடு ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. மழை பெய்யத்தொடங்கியபோதே அவர் குளிர் தாங்க முடியாமல் அருகில் உள்ள மற்றொரு வீட்டில் தூங்கச் சென்றார். இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

வேலூர் கோட்டையில் விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அருங்காட்சியகம் செல்லும் சாலையில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

வாணியம்பாடி பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தமிழக–ஆந்திர எல்லை பகுதியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பின. தொடர்ந்து மழை பெய்து வருவதால், வெள்ளநீர் புல்லூர் தடுப்பணையை கடந்து தமிழகத்திற்குள் பாய்ந்து பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சத்துவாச்சாரியில் இருந்து காங்கேயநல்லூருக்கு செல்லும் பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சிறுவர்கள் குளித்து விளையாடினர். பொதுமக்களும் ஆற்றில் இறங்கி கால்களை நனைத்து மகிழ்ந்தனர்.

வரும் நம்பர், டிசம்பர் மாதங்களில் வடக்கிழக்கு பருவமழை பெய்யும் என்கற நம்பிக்கையில் விவசாயிகள் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:–

வாணியம்பாடி–8, காவேரிப்பாக்கம்–8.8 ஆம்பூர்–13.2, வாலாஜா–14, திருப்பத்தூர்–14.2, ஆலங்காயம்–14.8, குடியாத்தம்–39, ஆற்காடு–62, வேலூர்–72, மேலாலத்தூர்–81.2 பதிவானது.


Related Tags :
Next Story