டாக்டர் இல்லாததால் மாணவி உள்பட 2 பேர் அடுத்தடுத்து சாவு


டாக்டர் இல்லாததால் மாணவி உள்பட 2 பேர் அடுத்தடுத்து சாவு
x
தினத்தந்தி 14 Aug 2017 4:50 AM IST (Updated: 14 Aug 2017 4:49 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் விபத்தில் காயம் அடைந்த ஒருவரும், இதய நோயால் பாதிக்கப்பட்ட மாணவியும் என 2 பேர் அடுத்தடுத்து இறந்தனர்.

ஆம்பூர்,

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் விபத்தில் காயம் அடைந்த ஒருவரும், இதய நோயால் பாதிக்கப்பட்ட மாணவியும் என 2 பேர் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் கொதிப்படைந்த பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (வயது 73). இவர் சென்னையில் ரப்பர் ஸ்டாம்பு, பிரிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவரும், சென்னையை சேர்ந்த ராஜ்குமார் (65) என்பவரும் ஒரு காரில் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டு இருந்தனர். காரை ராஜ்குமார் ஓட்டினார்.

கார் மதியம் 12.30 மணியளவில் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பச்சகுப்பம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரில் வந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனையில் ஒரு டாக்டர் கூட பணியில் இல்லை. இதனால் நர்சுகளே முதலுதவி சிகிச்சை அளித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் தாலுகா போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் படுகாயம் அடைந்த 2 பேரில் ராஜ்குமார் என்பவர் இறந்து விட்டது பணியில் இருந்த நர்சுகளுக்கு தெரியவந்தது.

ஆனால் அவர்கள் டாக்டர் இல்லாத காரணத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் இறந்தவருக்கு சிகிச்சை அளித்தனர். இதனிடையை விபத்து குறித்து அறிந்த சந்தானத்தின் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து அவரை மேல் சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் வேலூருக்கு அழைத்து சென்றனர்.

அதன்பிறகுதான் மற்றொருவரான ராஜ்குமார் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த பொதுமக்களும், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் திரண்டனர். இதேபோல நேற்று மதியம் ஒரு மணியளவில் ஆம்பூர் அருகே ராளகொத்தூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரது மகள் வைஷ்ணவியும் (வயது 13) இதய நோய் பாதித்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

வைஷ்ணவி அங்குள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தாள். டாக்டர் இல்லாத காரணத்தால் அந்த சிறுமியும் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் மாலை 4 மணியளவில் பரிதாபமாக இறந்தாள்.

இதனால் மேலும் ஆவேசம் அடைந்த பொதுமக்களும், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளும், அரசு ஆஸ்பத்திரியின் நுழைவு வாயில் கேட்டை பூட்டி போராட்டம் நடத்தினர். பணியில் இல்லாத டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், ஆஸ்பத்திரிக்கு தேவையான கூடுதல் டாக்டர்களை நியமிக்கக்கோரியும் அவர்கள் கோ‌ஷமிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் டவுன் போலீசார், மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி ஆகியோர் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டம் நடத்தியவர்களிடம், நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.



‘ரமணா’ சினிமா பாணியில் சிகிச்சை

விபத்தில் காயம் அடைந்து சிகிச்சைக்காக வந்த ராஜ்குமாருக்கு டாக்டர் சிகிச்சை அளிக்காத காரணத்தால் அவர் பரிதாபமாக இறந்தார். இருப்பினும் அதனை தெரிந்து கொண்ட நர்சுகள், டாக்டர் சொல்லாமல் எதுவும் தெரிவிக்க கூடாது என்ற காரணத்தால் விஜயகாந்த் நடித்த ‘ரமணா’ படத்தில் இறந்து போன ஒருவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதுபோல், இங்கும் இறந்து போன ராஜ்குமாருக்கு ஈ.சி.ஜி. எடுப்பது என சிகிச்சை அளிப்பது போல் காட்டிக் கொண்டனர். ஆஸ்பத்திரியில் நடந்த இந்த சம்பவம் பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story