‘பாதை மாறிச்சென்றால் ஆபத்தாக முடியும்’ எடப்பாடி பழனிசாமிக்கு டி.டி.வி. தினகரன் எச்சரிக்கை
பாதையை விட்டு மாறிச் சென்றால் ஆபத்தாக முடியும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டி.டி.வி.தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை,
அ.தி.மு.க. (அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
நான் நிர்வாகிகளை நியமித்தது செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். தேர்தல் கமிஷனில் அளிக்கப்பட்ட பிரமாண பத்திரத்தில் ஒன்றை கூறி விட்டு இங்கு பொய்யான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி இருக்கிறார்கள்.
முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் இதுபோன்ற மோசடி செயலைத்தான் ‘420’ என்று நான் கூறினேன். முதல்–அமைச்சரை பார்த்து இப்படி கூறலாமா? என்று என்னிடம் யாராவது கேள்வி கேட்டால் அதற்கு எனக்கு பயம் இல்லை. யாரைப் பார்த்தும் எனக்கு பயம் கிடையாது.
தாலிக்கு தங்கம் வழங்குவதில் லஞ்சம் கேட்பதாக அமைச்சர் மீது வெற்றிவேல் எம்.எல்.ஏ. குற்றம் சுமத்தி இருக்கிறார். அவர் மட்டுமல்ல பலரும் இதையே கூறுகிறார்கள். இந்த இயக்கத்தை வலுப்படுத்த நம்மால்தான் முடியும் என்று எம்.எல்.ஏ.க்கள் எங்கள் பக்கம் வந்த வண்ணம் உள்ளனர்.
நமது எம்.ஜி.ஆர். நாளேடு சின்னம்மா மேற்பார்வையில் இருந்தது. இப்போது உறவினர் விவேக் மேற்பார்வையில் நடைபெறுகிறது. அந்த பத்திரிகையில் நிர்வாகத்துக்கு எதிராக சிலர் செயல்பட்டனர். அந்த கருப்பு ஆடுகளை ‘களை’ எடுத்து விட்டோம்.
நிர்வாகத்தின் ஒப்புதல் இன்றி நிர்வாகத்துக்கு எதிராக கட்டுரைகள் வந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்சிக்காக பேசும்போது எங்களை பேசவிடாமல் தடுக்கிறார்கள். சிலரின் செயல்பாட்டால்தான் நாங்கள் பதில்சொல்ல வேண்டி உள்ளது. அதையும் பெருந்தன்மையாக யாரையும் தாக்காமல் பதில் சொல்கிறோம். அதை எதிர்கொள்ள முடியாதவர்கள் பதிலுக்கு பேசுகிறார்கள்.
உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால், நடிகர் கமல்ஹாசன் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் கண்ணியத்துடன் பதில் சொல்லியிருக்க வேண்டும். ஒருமையில் பேசியிருக்க கூடாது. கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் அர்ப்பனுக்கு வாழ்வுவந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பார்கள். அதைப்போல் தான் அமைச்சர்களின் செயல்பாடு உள்ளது.
அம்மா இருந்தபோது, இவர்கள் எப்படி இருந்தார்கள். இப்போது எப்படி பேசுகிறார்கள் என்பதை பார்த்தாலே புரியும். இன்று தறிகெட்ட நிலையில் உள்ளனர். அப்படி அடங்காமல் செல்லும் காளைகளை மூக்கனாங்கயிறு போட்டு அடக்குவோம்.
இந்த ஆட்சி அம்மா பாதையில் செல்லும் வரை ஆபத்தில்லை. இப்போது ஆட்சி நடக்கிறது. அவ்வளவு தான். இந்த ஆட்சி பாதையை விட்டு மாறிச் சென்றால் அது ஆபத்தாகத்தான் முடியும்.
எனக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை. மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன். முன்னாள் நண்பர்களால் இடையூறு ஏற்பட்டுள்ளது. அதை விரைவில் சரிசெய்து விடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.