விரைவில் சட்டமன்ற தேர்தல் வரும் சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரும் என்று சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
சிவகாசி,
சிவகாசி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் விஸ்வநத்தம் கிராமத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வனராஜா தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் விவேகன்ராஜ் வரவேற்று பேசினார். சிவகாசி நகர செயலாளர் முனியாண்டி, வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜா, வடக்கு மாவட்ட துணை செயலாளர் உதயசூரியன், பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:–
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் வரும். வாக்காளர்கள் தயாராக இருங்கள். நாடு நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த முறை ஒட்டுமொத்தமாக தி.மு.க.வை ஆதரிக்க வேன்டும். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது போட்ட ஒரு ஓட்டுக்கு இதுவரை 3 முதல்–அமைச்சர்கள் நாட்டை ஆண்டுவிட்டார்கள். இதில் புதியதாக ஒருவருக்கும் நாட்டை ஆள வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. தான் அடுத்து ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் இனி இரட்டை இலை சின்னம் இருக்காது. தற்போது அ.தி.மு.க.வில் உள்ள யாருக்கும் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இருக்கும் வரை சம்பாதிக்க வேண்டும் என்றே இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கம்தென்னரசு பேசியதாவது:–
அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் சீர் கெட்டு போய் உள்ளது. அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது எடப்பாடி பழனிசாமி முதல்–அமைச்சர் பதவியுடன் சபைக்கு வருவாரா? என்ற அச்சம் நாட்டு மக்களுக்கு, குறிப்பாக அந்த கட்சியை சேர்ந்தவர்களுக்கே ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் இந்த மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றியது. அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் 7 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும். இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க. தலைமைக்கழக பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் ஐ.லியோனியும் கூட்டத்தில் பேசினார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் சக்கையா, தொண்டரணி கணேசன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் இளைஞரணி சின்னதம்பி நன்றி கூறினார்.