காரில் கடத்தி வந்த ரூ.50 ஆயிரம் மதுபாட்டில்கள்- 100 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்


காரில் கடத்தி வந்த ரூ.50 ஆயிரம் மதுபாட்டில்கள்- 100 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
x
தினத்தந்தி 15 Aug 2017 4:30 AM IST (Updated: 15 Aug 2017 2:36 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் இருந்து காரில் கடத்தி வந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள்-100 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாடு முழுவதும் சுதந்திர தினவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக் உத்தரவின்பேரில், நாகை மாவட்டத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று காலை நாகூரை அடுத்த வாஞ்சூர் சோதனை சாவடியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முனியாண்டி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

2 பேர் கைது

அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து வந்த காரை போலீசார் மறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 8 அட்டை பெட்டிகளில் 384 மதுபாட்டில்கள் மற்றும் பாலீதீன் பைகளில் 100 லிட்டர் புதுச்சேரி எரிசாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் காரில் வந்தவர்கள் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை புனவாசல் தெற்கு தெருவை சேர்ந்த சேவியர் (வயது45), சிமியோன் (58) என்பதும், இவர்கள் காரைக்காலில் இருந்து காரில் மதுபாட்டில்கள் மற்றும் எரிசாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சேவியர், சிமியோன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர் மேலும், அவர்களிடம் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், 100 லிட்டர் எரிசாராயத்தையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். 

Next Story