விவசாயிகள் சங்கம் சார்பில் நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்துகொள்ள வேண்டும்


விவசாயிகள் சங்கம் சார்பில் நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்துகொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 15 Aug 2017 4:15 AM IST (Updated: 15 Aug 2017 2:38 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் சங்கம் சார்பில் நாளை (புதன்கிழமை) நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெல்லை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்டக்குழு கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் சத்யன், பெரும்படையார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர் சுப்புராயன், முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி பேசுகையில், ‘விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்வது இல்லை. குறிப்பாக தமிழர்களை வஞ்சிக்கும் போக்கில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே பல இடங்களில் அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் இதை மத்திய அரசு கண்டுகொள்வது இல்லை. ஏனெனில் கர்நாடகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் வருகிறது. அந்த தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக கர்நாடகத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறி அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் 16–ந்தேதி (நாளை) ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இதில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்‘ என்றார்.

கூட்டத்தில் அனைத்து விவசாயிகளின் கடனையும் ரத்து செய்யவேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். செண்பகவல்லி கால்வாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி நாளை (புதன்கிழமை) நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், விவசாயிகள் சங்க செயலாளர் கசமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story