ஆண்டிப்பட்டி பகுதியில் பலத்த மழை: வீடுகளுக்குள் புகுந்த ஓடை தண்ணீர் பொதுமக்கள் அவதி
ஆண்டிப்பட்டி பகுதியில் பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் ஓடை தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
ஆண்டிபட்டி,
ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் கரிசல்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 500–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆண்டிபட்டியில் இருந்து இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் போடி–மதுரை ரெயில் பாதை அமைந்துள்ளது. இதே பகுதியில் கோவில்பட்டி கண்மாய்க்கு செல்லும் ஓடை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஓடையின் குறுக்கே ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியது.
ஆனால் ஓடையில் தண்ணீர் செல்ல மாற்று ஏற்பாடு ஏதும் செய்யப்படவில்லை. இதற்கிடையே மழைக்காலத்தில் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் ஓடை அருகே உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடும். எனவே ஓடை தண்ணீர் செல்ல மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று ஆண்டிப்பட்டி பகுதியில் மாலை 3 மணிக்கு மேல் வானில் மேக கூட்டங்கள் திரண்டன. சிறிது நேரத்தில் இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்யத்தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த மழையால் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முதலில் மேம்பால பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் நிரம்பிய தண்ணீர் அதன் பிறகு கரிசல்பட்டி கிராமத்துக்குள் புகுந்தது. இதில் அப்பகுதியில் உள்ள 20–க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துகொண்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஓடை தண்ணீரை மாற்று வழியில் திருப்பி விடும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே மழை பெய்வதும் குறைந்ததால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் வழிந்து வெளியேறியது. அதன் பின்னரே அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஓடை தண்ணீரை மாற்றுப்பாதையில் திருப்பிவிட நடவடிக்கை எடுக்கும்படி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனாலேயே தற்போது மழை பெய்த போது வீடுகளை ஓடை நீர் சூழ்ந்துகொண்டது. இதன் காரணமாக எங்கள் பகுதி மக்கள் பெரிதும் அவதியடைந்தனர் என்றனர்.