பெங்களூரு இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி 4 பேர் கைது
கிழக்கு கடற்கரை சாலையில் பெங்களூரு இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாமல்லபுரம்,
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் மாமல்லபுரம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். அதில், 23 வயது இளம்பெண் மற்றும் 4 வாலிபர்கள் இருந்தனர். போலீசை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.
போலீசார் அந்த பெண் உள்பட 5 பேரையும் மடக்கி பிடித்து மாமல்லபுரம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் பெங்களூருவை சேர்ந்த அந்த இளம்பெண்ணை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீட்டில் வாடிக்கையாளர் ஒருவருடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த அழைத்துச் சென்றதாக தெரிவித்தனர்.
இதையடுத்து கார் டிரைவர் நரசிம்மராவ்(வயது 48), தரகர் சங்கர்(40), வாடகைக்கு பண்ணை வீடு எடுத்து நடத்தி வந்த வினோத்(35), விக்னேஷ்(38) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள், திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட பெங்களூரு இளம்பெண், சென்னை மயிலாப்பூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.