அவினாசியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


அவினாசியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 15 Aug 2017 4:00 AM IST (Updated: 15 Aug 2017 3:38 AM IST)
t-max-icont-min-icon

அவினாசியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அவினாசி,

அவினாசி பேருராட்சி 15–வது வார்டில் சீனிவாசபுரம், பாரதிதாசன் வீதி, கால்நடை மருத்துவமனை வீதி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளுக்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் குடிநீர் கிடைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று குடிநீர் கேட்டு, தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் விரைந்து சென்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:–

பேரூராட்சி 15–வது வார்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் வற்றி விட்டது. மேலும் இந்த பகுதியில் தனியார் ஒருவர் ஆயிரம் அடிக்கு கீழ் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதில் இருந்து கிடைக்கும் தண்ணீரை லாரிகள் மூலம் விற்பனை செய்து வருகிறார். இதனால் மற்ற ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இல்லை. மேலும் சீனிவாச புரம் பகுதி ஆழ்குழாய் கிணற்றில் பொருத்தப்பட்டு இருந்த மோட்டார் பழுதாகி விட்டது. இந்த மோட்டாரை பொதுமக்கள் பங்களிப்புடன் பழுது நீக்கி பொருத்த பேரூராட்சி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டோம். ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதியடைகிறோம்.எனவே எங்கள்பகுதிக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பேரூராட்சி அலுவலர்கள் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story