நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கேட்பது மாணவர்களை அழிக்கும் செயல்: மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கேட்பது மாணவர்களை அழிக்கும் செயல்: மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 15 Aug 2017 5:15 AM IST (Updated: 15 Aug 2017 4:29 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்‘ தேர்வுக்கு நிரந்தர விலக்கு கேட்பது மாணவர்களை அழிக்கும் செயல் என்று கோவையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனர் கூறினார்.

கோவை,

கோவை கொடிசியா அருகே உள்ள இஸ்கான் (அகில உலக கிருஷ்ண பக்தர்கள் இயக்கம்) ஜெகன்நாதர் கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பா.ஜனதா தலைவர் அமித்ஷா வருகிற 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் கோவை வருகிறார். அவரின் வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் இது ஆட்சி மாற்றமல்ல. நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு கிடைக்க வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. இதில் மத்திய அரசும் தனது நிலைபாட்டை தெரிவித்து உள்ளது.

தமிழக அரசு கேட்கும் விலக்கு என்பது தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரி இடங்களுக்கும், தனியார் கல்லூரிகள் அரசிடம் ஒப்படைக்கும் இடங்களுக்கும் மட்டுமே. நீட் தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விலக்கு கேட்பது சரி அல்ல. 3 ஆண்டுகளுக்கு விலக்கு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அடுத்த முறை நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டால் கிடைக்காது.

தமிழக மாணவர்களை தகுதி நிறைந்தவர்களாக மாற்றும் கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் முயற்சி பாராட்டத்தக்கது. தமிழக அரசு நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கேட்பது மாணவர்களை நிரந்தரமாக அழிக்கும் செயல். 8–ம் வகுப்பு வரை தேர்ச்சி என்பது தேவையில்லாதது. அவர்களை ஆரம்ப கல்வியில் இருந்து தயார்படுத்த வேண்டும். உலகத்தரத்தில் போட்டியிடும் வகையில் மாணவர்களை தயார்படுத்த வேண்டும்.

தி.மு.க., காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுக்கும், அவர்களின் செயல்பாட்டுக்கும் சம்பந்தம் இருக்காது. நீட் தேர்வை வலியுறுத்தியதே தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தான். இப்போது நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு மேல் முறையீடு செய்வது அரசியல் சித்து விளையாட்டு ஆகும்.

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக மாணவர்களையும், பொதுமக்களையும் ஒன்று திரட்டி போராடுவோம் என்று வைகோ கூறியுள்ளார். முதலில் அவர் தனது கட்சிக்காரர்களை ஒன்று திரட்டட்டும். அப்புறம் பொதுமக்களை திரட்டலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன் பின்னர் நடந்த ‘ஆதிவாஸ்’ என்ற நிகழ்ச்சிக்கு இஸ்கான் மண்டல செயலாளர் பக்தி வினோத சுவாமி மகாராஜ் முன்னிலை வகித்தார். மாணவர் பண்பு நல மையத்துக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார். மேலும் கோவில் கட்டுமான பணிகளையும் அவர் பார்வையிட்டார். அதன்பின்னர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதில் பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மகா கலசாபிஷேகம், சங்காபிஷேகம் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட பா.ஜனதா தலைவர் நந்தகுமார், மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், அத்வைத் குழும தலைவர் ரவிசாம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இஸ்கான் கோவிலில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்ந்து விழா நடக்கிறது.


Next Story