ஊமைத்துரையை அடைத்து வைத்திருந்த பாளையங்கோட்டை ஜெயில்


ஊமைத்துரையை அடைத்து வைத்திருந்த பாளையங்கோட்டை ஜெயில்
x
தினத்தந்தி 15 Aug 2017 4:30 AM GMT (Updated: 2017-08-15T09:41:11+05:30)

திருநெல்வேலி சீமை என்று அழைக்கப்படுகின்ற திருநெல்வேலி சுதந்திரப்போராட்ட வீரர்களையும், தியாகி களையும் அதிகம் கொண்ட மாவட்டமாகும்.

ஒன்றுபட்ட நெல்லை மாவட்டமானது சுதந்திரப்போராட்ட வீரர்கள் பூலிதேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத் துரை, வெள்ளையதேவன், ஒண்டிவீரன், சுந்தரலிங்கம், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய பாரதி உள்ளிட்டவர்கள் வாழ்ந்த பூமியாகும்.

பாஞ்சாலங்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் 1790-ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வந்தார். அவருக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைசிங்கம் என்ற 2 தம்பிகள் இருந்தனர்.
இவர்கள் இருவரும் அண்ணன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உறுதுணையாக இருந்து வந்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளையர்களை எதிர்த்து அவர் களுக்கு வரி கொடுக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவரை பிடித்து தூக்கிலிடவேண்டும் என்று எண்ணிய வெள்ளையர்கள் அவரை பிடிக்க முயற்சி செய்தனர்.

துரோகிகளின் துணையோடு 1799-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் அவரை புதுக்கோட்டையில் கைது செய்தனர். கயத்தாறுக்கு அழைத்து வந்து பானர்மேன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் கயத்தாறில் 1799-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந்தேதி தூக்கிலிட்டனர். இதைத்தொடர்ந்து அவருடைய குடும்பத்தினரை வீட்டுக்காவலிலும், சிறையிலும் அடைத்தனர்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி குமாரசாமி என்ற ஊமைத்துரையை ஆங்கிலேயர்கள் கைது செய்து பாளையங்கோட்டைக்கு அழைத்து வந்து அங்குள்ள சிறையில் அடைத்தனர். சிறையில் முதலில் அவருக்கு கைக்கும், காலுக்கும், கழுத்துக்கும் விலங்கு போடப்பட்டு இருந்தது. அதன் பிறகு அவருடைய விலங்குகளை கழற்றி விட்டுவிட்டனர். சிறையில் இருந்த ஊமைத்துரை எப்படியாவது அங்கிருந்து தப்பித்துச் சென்று, மீண்டும் படை திரட்டி போராடவேண்டும் என்ற எண்ணத்தோடு ஜெயிலில் இருந்த தனது படைவீரர்களுடன் திட்டமிட்டார்.

ஒற்றர்களின் உதவியுடன் ஜெயிலுக்கு பொருட்கள் கொண்டு வருகிறவர்கள், ஆயுதங்களையும் கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்த ஊமைத்துரை மற்றும் வீரர்கள் 1801-ம் ஆண்டு அங்கிருந்த ஆங்கிலேயர்களை தாக்கி விட்டு சிறையை தகர்த்து தப்பிச் சென்றனர். பாஞ்சாலங்குறிச்சி சென்று மீண்டும் படை திரட்டி நட்டாத்தியை சேர்ந்தவர் களின் உதவியுடன் பதநீர், சுண்ணாம்பு சேர்த்து மீண்டும் கோட்டை கட்டி ஊமைத்துரை ஆட்சி செய்தார். அப்போது அவரை எதிர்த்த ஆங்கிலேயர்களை வீழ்த்தினார். அவருடன் போரிட்டு இறந்த ஆங்கிலேயர்களின் கல்லறைகள் அந்த பகுதியில் இன்றும் உள்ளன.
ஊமைத்துரை சிறை பிடித்து வைத்திருந்த ஒரு ஆங்கிலேயரின் மனைவி அவரிடம், தனது கணவரை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கேட்டார். உடனே அந்த ஆங்கிலேயரை அவருடைய மனைவியுடன் பாதுகாப்பாக அனுப்பி வைத்தவர் என்ற பெருமைக்குரியவர் ஊமைத்துரை. மீண்டும் படை திரட்டிய ஊமைத்துரை, மருது சகோதரர்களுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார்.

அவரையும், அவருடைய தம்பி துரைசிங்கத்தையும் காளையார்கோவிலில் வைத்து ஆங்கிலேயர்கள் கைது செய்து பாஞ்சாலங்குறிச்சி அழைத்து வந்து கோட்டை முன்பு வைத்து அவர்கள் 2 பேரையும் தூக்கிலிட்டனர். இதன் பிறகு அந்த கோட்டையை இடித்து தரைமட்டமாக்கினார்கள். பாஞ்சாலங்குறிச்சியை வரைபடத்தில் இருந்து நீக்கினார்கள்.

பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை கட்டப்பட்டிருந்த இடம் இன்று வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றை கூறுகின்ற மண்டபமாக உள்ளது.

ஊமைத்துரையை வெள்ளையர்கள் கைது செய்து பாளையங்கோட்டைக்கு அழைத்து வந்து அவரை அடைத்து வைத்திருந்த சிறையானது தற்போது அருங்காட்சியகமாக உள்ளது. இந்த அருங்காட்சியகம் பழங்கால கட்டிட பாணியில் கற்களை கொண்டு கட்டப்பட்டது. உள்ளே பாதாள அறையும் இருந்தது. தற்போது அந்த அருங்காட்சியகத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த கோவில் சிலைகள், ஓவியங்கள் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டு உள்ளன.

Next Story