வீர மரணம் அடைந்த இளையான்குடி வீரரின் குடும்பத்தினருக்கு வைகோ ஆறுதல்


வீர மரணம் அடைந்த இளையான்குடி வீரரின் குடும்பத்தினருக்கு வைகோ ஆறுதல்
x
தினத்தந்தி 15 Aug 2017 11:45 PM GMT (Updated: 15 Aug 2017 9:20 PM GMT)

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்த இளையான்குடி வீரரின் குடும்பத்தினருக்கு வைகோ ஆறுதல் கூறினார்.

இளையான்குடி,

காஷ்மீரில் கடந்த 13-ந்தேதி தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் இறந்துபோனார்கள். இதில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த கண்டனி கிராமத்தை சேர்ந்த இளையராஜாவும்(வயது 26) ஒருவர். அவரது உடல் அடக்கம் நேற்று முன்தினம் ராணுவ மரியாதையுடன் நடைபெற்றது.

இந்தநிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலை ராணுவ வீரர் இளையராஜாவின் வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் வீர மரணம் அடைந்த இளையராஜாவின் மனைவி, தாய்-தந்தைக்கு ஆறுதல் கூறினார். அவர் கூறும்போது, இறந்துபோன இளையராஜாவின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

ராணுவ வீரர் இளையராஜா இறந்த செய்தி அவரது தந்தை பெரியசாமிக்கு தெரியாமல் இருந்தது. அவர் வேலை தேடி வெளியூர் செல்வாராம். சில நாட்களுக்கு பிறகு தான் ஊருக்கு திரும்புவார். மேலும் அவர் செல்போன் பயன்படுத்துவதில்லை. இதனால் பெரியசாமிக்கு தனது மகன் இறந்த செய்தியை தெரிவிக்க முடியாமல் குடும்பத்தினர் தவித்தனர். இதன் காரணமாக இளையராஜாவின் இறுதி சடங்குகளை அவரது தாயார் மீனாட்சி செய்தார்.

இந்தநிலையில் பெரியசாமி நேற்று ஊர் திரும்பினார். அவர், இளையராஜா அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று மகனின் முகத்தை பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று கதறி அழுதார். பின்னர் அவர் கூறுகையில், கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்ததாகவும், மகனின் இறந்த செய்தியை நாளிதழில் பார்த்து ஊர் திரும்பியதாகவும் கூறினார்.

இதற்கிடையில் வீர மரணம் அடைந்த இளையராஜாவின் உறவினர் மணிகண்டன்(வயது 24), இளையராஜா இறந்துபோன துக்கம் தாங்காமல் விஷம் குடித்துவிட்டார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பரமக் குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். 

Next Story