சுதந்திர தின விழா: சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு சான்றிதழ் கலெக்டர் மலர்விழி வழங்கினார்
சுதந்திர தின விழாவையொட்டி சிவகங்கையில் உள்ள கலெக்டர் அலுவலக மைதானத்தில் கலெக்டர் மலர்விழி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவையொட்டி சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் அலுவலக மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக விழா நடைபெறும் மைதானத்திற்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி காலை 8.30 மணிக்கு வந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் வரவேற்றார். பின்னர் கலெக்டர் மலர்விழி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது போலீஸ் இசை குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். தொடர்ந்து கலெக்டர் மலர்விழி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் வெண்புறாக்களையும், பலூன்களையும் பறக்க விட்டனர். பின்னர் அவர்கள் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டனர். பின்னர் ஆயுதபடை போலீசார், பெண் காவலர்கள், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், சாரணர் படையினர் ஆகியோர் அணிவகுத்து வந்து மரியாதை செலுத்தினார்கள்.
இதனையடுத்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கலெக்டர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். பின்னர் வருவாய்த்துறையில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, வட்டாட்சியர்கள் உஷாநந்தினி(தேவகோட்டை), கண்ணன்(காரைக்குடி), சுமதி என்ற சுதந்திரா(திருப்பத்தூர்) ஆகியோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய ன்ஸ்பெக்டர்கள் மோகன், முத்துகுமார், பொன்ரகு, சாதுரமேஷ் உள்பட 16 பேருக்கும், 20 சப்–இன்ஸ்பெக்டர்களுக்கும், 66 தனிப்பிரிவு ஏட்டுகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதேபோல் ஊரக வளர்ச்சித்துறையில் வறட்சி நிவாரண பணிகளில் சிறப்பாக பணியாற்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாபன், ரகுவீரகணபதி, உதவி பொறியாளர் துவிகா ஆகியோருக்கு கேடயம் மற்றும் சான்றிதழும், ஊராட்சி ஒன்றியங்களில் சிறப்பாக செயல்பட்ட காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புத்துரை, ரஜினிதேவி, சாக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணபவன், பிச்சை, எஸ்.புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், குணசேகரன், தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ, தாயுமாணவன், திருப்பதிராஜன் ஆகியோருக்கு கேடயம் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
சுதந்திர தினவிழாவையொட்டி முன்னாள் படைவீரர் நலத்துறை, மாற்று திறனாளிகள் நலத்துறை, வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை, சமூகநலத்துறை, வேளாண்மை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 59 பயனாளிக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவ–மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முருகானந்தம் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.