சுதந்திர தினவிழா கொண்டாட்டம்; ரூ.57 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்


சுதந்திர தினவிழா கொண்டாட்டம்; ரூ.57 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்
x
தினத்தந்தி 15 Aug 2017 10:45 PM GMT (Updated: 15 Aug 2017 9:25 PM GMT)

நாமக்கல்லில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியகொடியை ஏற்றிய மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், 136 பயனாளிகளுக்கு ரூ.57¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல்,

சுதந்திர தினவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் காலை 8.35 மணிக்கு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து வெண்புறாக்களையும், வண்ண பலூன்களையும் வானில் பறக்க விட்டார்.

நலத்திட்ட உதவிகள்

அதை தொடர்ந்து கலெக்டர், விழாவில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசுத்துறை அலுவலர்களுக்கு, அவர்களது பணியினை பாராட்டி நற்சான்றிதழ்களையும் வழங்கினார்.

பின்னர் வருவாய்த்துறையின் சார்பில் 72 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் உள்பட மொத்தம் 136 பயனாளிகளுக்கு ரூ.57 லட்சத்து 73 ஆயிரத்து 716 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

கலை நிகழ்ச்சிகள்

விழாவை முன்னிட்டு கந்தம்பாளையம் எஸ்.கே.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு மகாதேவ வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் சுரபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருச்செங்கோடு புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி ஆகிய 8 பள்ளிகளைச் சேர்ந்த 502 மாணவ, மாணவிகள் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நிறைவாக சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பள்ளிகளுக்கு சுழற்கேடயமும், குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

விழாவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் மாலதி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பாலச்சந்திரன், முதன்மை கல்வி அதிகாரி உஷா, உதவி கலெக்டர்கள் ராஜசேகரன், பாஸ்கரன் உள்பட அரசுதுறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள், பயனாளிகள், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story