நாகையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் ரூ.64 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்


நாகையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் ரூ.64 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 16 Aug 2017 4:15 AM IST (Updated: 16 Aug 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் பயனாளிகளுக்கு ரூ.64 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் போலீசார் சார்பில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார். அதைதொடர்ந்து கலெக்டர் சுரேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் ஆகியோர் ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டனர். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள் 9 பேருக்கு சால்வை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். மைதானத்தில் சமாதான புறா பறக்கவிடப்பட்டது. விழாவில் வருவாய் துறையில் 8 பேருக்கும், போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய 27 பேருக்கும், ஊரக வளர்ச்சி துறையில் 6 பேருக்கும், கால்நடை பராமரிப்பு துறையில் 2 பேருக்கும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் ஒருவருக்கும், சுகாதாரத்்துறை மற்றும் குடும்பநலத்துறையில் 10 பேருக்கும், சர்வதேச அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கிடையேயான கடற்கரை கைப்பந்து போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற 2 பேருக்கும் என மொத்தம் 56 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்.

இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பேருக்கு விலையில்லா தையல் எந்திரம் மற்றும் 1 பயனாளிக்கு ரூ.6 ஆயிரத்து 500 மதிப்பலான மூன்று சக்கர சைக்கிள் என 3 பேருக்கு ரூ.14 ஆயிரத்து 972 மதிப்பீட்டிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 800 வீதம் ரூ.19 ஆயிரத்து 200 மதிப்பிலான இஸ்திரி பெட்டி, வேளாண்மை துறை சார்பில் வேளாண் உபகரணங்கள், விதைநெல் மற்றும் இடுபொருட்கள் என 5 பயனாளிகளுக்கு ரூ.31 ஆயிரத்து 142 மதிப்பிலும், கூட்டுறவு துறை சார்பில் 4 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் என மொத்தம் ரூ.7 லட்சத்து 75ஆயிரம் மதிப்பிலும், சமூக நலத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் அவர்களது பெற்றோர் 5 பேருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான வைப்பு தொகை ரசீதும், தாட்கோ நிறுவனம் மூலம் சுயதொழில் செய்வதற்கு வாகனம் வாங்க 4 பயனாளிகளுக்கு ரூ.24 லட்சத்து 41 ஆயிரத்து 15 மதிப்பிலும், மகளிர் திட்டம் மூலம் 5 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.13 லட்சத்து 65 ஆயிரம் கடன் உதவி, தோட்டக்கலைத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரத்து 644 மதிப்பிலான பாசன கருவிகள், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் தொழில் தொடங்க 5 பேருக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி என மொத்தம் 96 பயனாளிகளுக்கு ரூ.64 லட்சத்து 16 ஆயிரத்து 973 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்.

விழாவில் நாகை மாவட்டத்தில் 11 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பரதம், யோகா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், சீர்காழியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி சுபானு, ஆணிகள் பதித்த பலகை மேல் படுத்து யோகா செய்து காண்பித்தார். அதைதொடர்ந்து போலீஸ் மோப்ப நாய் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் முகுந்தன், நாகை உதவி கலெக்டர் கண்ணன், ஊர்க்காவல் படை மண்டல தளபதி ஆனந்த் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 

Next Story