கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார் ரூ.1¼ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன


கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார் ரூ.1¼ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
x
தினத்தந்தி 16 Aug 2017 4:15 AM IST (Updated: 16 Aug 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினவிழாவையொட்டி திருவண்ணாமலையில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தேசியகொடியை ஏற்றி வைத்து ரூ.1 கோடியே 33 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருவண்ணாமலை,

இந்தியாவின் 71-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி தலைமை தாங்கினார். காலை 8-30 மணியளவில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் சமாதானத்தை குறிக்கும் வகையில் புறாக்கள் மற்றும் தேசிய கொடி நிறமுடைய வண்ண பலூன்களை பறக்க விட்டார். அதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதனை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோர் பார்வையிட்டு ஏற்றுக் கொண்டனர். பின்னர் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு கலெக்டர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

விழா பந்தலில் தியாகிகள் அமர்ந்திருந்த இடத்திற்கு கலெக்டர் சென்று அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி கவுரவப்படுத்தினார்.

இதையடுத்து வருவாய்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூக நலத்துறை, வேளாண்மை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பழங்குடியினர் நல மேம்பாட்டு திட்ட அலுவலகம், கூட்டுறவு துறை, கால்நடை பராமரிப்பு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை உள்பட பல்வேறு துறை சார்பில் 326 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 33 லட்சத்து 94 ஆயிரத்து 625 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

பின்னர் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேசிய ஒருமைப்பாடு, ஒற்றுமையை விளக்கி நடந்த கலைநிகழ்ச்சிகள் மற்றும் கிராமிய நடனம், மனித பிரமீடுகள், கயிற்றில் தொங்கி சாகசம், போலீஸ்துறை மோப்ப நாய்களின் துப்பறியும் நிகழ்ச்சி மற்றும் சாகசம் போன்றவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் நிகழ்ச்சியில், ஒரு வாலிபர் ராணுவத்தில் சேர்வதும், பின்னர் அவர் விடுமுறையில் ஊருக்கு திரும்பி வந்து ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ளவது போன்றும், மேலும் அவர் நிறைமாத கர்ப்பிணியை விட்டு விட்டு நாட்டுக்காக போருக்கு சென்று வீர மரணம் அடைவது போன்றும், இறந்த ராணுவவீரரின் மனைவி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து வளர்த்து அவரை தந்தையின் வழியிலேயே ராணுவத்தில் சேர்ப்பதை தத்ரூபமாக நடித்து காட்டினர்.

அவர்களை கலெக்டர் வெகுவாக பாராட்டினார். மேலும் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிகளுக்கு சிறப்பு பரிசுகள், கேடயங்கள், கோப்பைகளை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வழங்கி பாராட்டினார்.

விழாவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவாளிபிரியா, உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள், அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். சுதந்திர தினவிழா நடந்த பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. 

Next Story