கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வரதராஜ பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா


கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வரதராஜ பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா
x
தினத்தந்தி 16 Aug 2017 4:00 AM IST (Updated: 16 Aug 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஒகளூர் வரதராஜபெருமாள் கோவிலில் உறியடி திருவிழா நடைபெற்றது.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள ஒகளூர் கிராமத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி உடனுறை வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை கிருஷ்ணர் சிலைக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து கிருஷ்ணர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உறியடி விழா பந்தலுக்கு கொண்டு வரப்பட்டார். இதையடுத்து உறியடி விழா நடைபெற்றது. பந்தலில் சீடை, பணம், வெள்ளி காசுகள், பூக்கள் கொண்ட மூட்டையை அடித்தனர். பின்னர் கழு மரம் ஏறும் திருவிழா நடைபெற்றது.

இந்த விழாவில் ஒகளூர், குடிக்காடு, புதுப்பேட்டையை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்து இருந்தனர்.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்

பெரம்பலூரில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா மகா உற்சவம் மேரிபுரத்தில் உள்ள முத்துக்கோனார் ரெங்கநாயகி மகாலில் நேற்று முன்தினம் நடந்தது. இதனை முன்னிட்டு கிருஷ்ணரின் கதை சொல்லும் போட்டியும், அதனை தொடர்ந்து 10 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு மகாபாரதம், ராமாயணம், பாகவதம் புராணங்களில் இருந்து கிருஷ்ணர், ராதை மாறுவேடங்கள் ஏற்ற மாற்றுடை போட்டிகள் நடந்தது. இதில் திரளான சிறுவர்-சிறுமிகள் கலந்து கொண்டனர்.

மாலை நாமசங்கீர்த்தனம், அபிஷேகம், கிருஷ்ணர் அவதாரம்-உபன்யாச நிகழ்ச்சியும், பரிசளிப்பு விழாவும் நடந்தது. நிகழ்ச்சி நிறைவாக மகா ஆரத்தி நடந்தது. அஷ்ட லட்சுமி கலசங்களுக்கு புனித தீர்த்தங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை இஸ்கான் அமைப்பின் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதானந்த சைதன்யதாஸா மற்றும் இஸ்கான் தன்னார்வ தொண்டர்கள் செய்திருந்தனர். 

Related Tags :
Next Story