தோல் கழிவு குடோனில் பயங்கர தீ விபத்து தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி அணைத்தனர்


தோல் கழிவு குடோனில் பயங்கர தீ விபத்து தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி அணைத்தனர்
x
தினத்தந்தி 16 Aug 2017 4:45 AM IST (Updated: 16 Aug 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் தோல் கழிவு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 லாரி கட்டுமான கூடங்கள், ஒரு மினிலாரி எரிந்து சாம்பலானது. தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

வேலூர்,

வேலூர் மக்கான் பகுதியை சேர்ந்தவர் ஜமீல் (வயது 38). இவர் ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் பழைய தோல் பொருட்கள், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் ரசாயனங்களை சேமித்து வைக்க பயன்படும் இரும்பு, பிளாஸ்டிக் பேரல்கள் ஆகியவற்றை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இதற்காக அவர் தோட்டப்பாளையம் அருகே குடோன் அமைத்து பொருட்களை தேக்கி வைத்திருந்தார்.

ஜமீல் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடோனை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென குடோனில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன. தீ வேகமாக பரவி 50 அடி உயரத்துக்கும் மேலாக பற்றி எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வடக்கு போலீசார் அசம்பாவிதங்களை தடுக்கும்பொருட்டு மின்ஊழியர்களை தொடர்பு கொண்டு அப்பகுதியில் மின்வினியோகத்தை நிறுத்தினர். சிறிதுநேரத்தில் வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டது. குடோன் அருகேயுள்ள 2 லாரி கட்டுமான கூடத்துக்கும் தீ பரவியது. இதனால் அந்த லாரி கட்டுமான கூடங்கள் மற்றும் அதன் அருகே நின்று கொண்டிருந்த மினிலாரி ஆகியவை தீப்பிடித்து எரிந்தன. பிளாஸ்டிக் பேரல்கள் வெடித்து சிதறியதால் தீயணைப்பு வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து ராணிப்பேட்டை, காட்பாடி, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 7 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

இந்த தீவிபத்தில் தோல் கழிவு குடோனில் இருந்த பொருட்கள், 2 லாரி ஷெட்டுகள், மினிலாரி ஆகியவை எரிந்து சாம்பலாயின. சேத மதிப்பு பல லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story