பெரம்பலூர் சுதந்திர தினவிழா: கலெக்டர் தேசிய கொடி ஏற்றி வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினார்


பெரம்பலூர் சுதந்திர தினவிழா: கலெக்டர் தேசிய கொடி ஏற்றி வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
x
தினத்தந்தி 16 Aug 2017 4:30 AM IST (Updated: 16 Aug 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் நடந்த சுதந்திர தின விழாவில், கலெக்டர் சாந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்து 125 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 71-வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் சாந்தா தேசிய கொடியை ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினார்.

பின்னர் ஒற்றுமையை வலியுறுத்தி சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டன. அதனைத்தொடர்ந்து போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், ஊர்க்காவல் படைவீரர்கள், சாரண-சாரணியர் இயக்கம், தேசிய பசுமைப்படை மாணவ-மாணவிகள் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகள் உள்பட 16 பேருக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். மேலும் 2015-ம் ஆண்டில் படைவீரர் கொடி நாள் நிதி வசூலில், அதிக வசூல் செய்ததற்காக மாவட்ட வருவாய் அலுவலருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த 34 போலீசாருக்கு நற்சான்றிதழ், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 203 அரசுத்துறை அலுவலர் களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

இதில் வருவாய்த்துறை, மாவட்ட ஊரக வளர்்ச்சி முகமை, மகளிர் திட்டம், முன்னாள் படைவீரர் நலத்துறை, பிற்பட்டோர், ஆதிதிராவிடர், சமூகநலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறைகளின் மூலம் 125 பயனாளிகளுக்கு ரூ.77 லட்சத்து 36 ஆயிரத்து 421 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தா வழங்கினார்.

இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மாவட்ட அரசு இசைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற தேசப்பற்று நடனம், கிராமிய கலைநிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள் உள்பட ஏராளமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி ஸ்ரீதர் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை மற்றும் சட்டப்பணிகள் துறை சார்பில் மாவட்ட செசன்சு கோர்ட்டு நீதிபதி பாலராஜமாணிக்கம் தேசிய கொடியை ஏற்றினார். இதில் மாவட்ட குற்றவியல் நீதிபதி சஞ்சீவிபாஸ்கர், சார்பு நீதிபதிகள் ஜெயந்தி, வினோதா, கூடுதல் மகளிர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு மோகனப்பிரியா மற்றும் வக்கீல் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் உள்ள அரசு அலுவலகங்களிலும், கல்லூரிகளிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு, வட்டார வளர்ச்சி அதிகாரி மரியதாஸ் தலைமை தாங்கி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அதிகாரி மணிவாசகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சின்னப்பையன், பொறியாளர் பாரி ஆகியோர் பேசினார்கள்.

இதேபோல் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி முதல்வர் மணிமேகலை தலைமை தாங்கி, தேசியகொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

Next Story