மதுரையில் சுதந்திர தினவிழா: கலெக்டர் வீரராகவராவ் தேசியகொடியை ஏற்றி வைத்தார்


மதுரையில் சுதந்திர தினவிழா: கலெக்டர் வீரராகவராவ் தேசியகொடியை ஏற்றி வைத்தார்
x
தினத்தந்தி 16 Aug 2017 3:45 AM IST (Updated: 16 Aug 2017 3:10 AM IST)
t-max-icont-min-icon

மதுரை ஆயுதப்படைபோலீஸ் மைதானத்தில் நடந்த சுதந்திரதினவிழாவில் கலெக்டர் வீரராகவராவ் தேசிய கொடியை ஏற்றிவைத்து, வெண் புறாக்களை பறக்கவிட்டார். 1,700 மாணவ- மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

மதுரை,

நாடுமுழுவதும் சுதந்திரதினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மதுரை ஆயுதப்படைபோலீஸ் மைதானத்தில் சுதந்திரதினவிழா நடந்தது. விழாவில் காலை 8.35 மணிக்கு கலெக்டர் வீரராகவராவ் தேசியகொடியை ஏற்றிவைத்து, வெண்புறாக்களை பறக்கவிட்டு, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அதைதொடர்ந்து சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். பின்பு 315 பயனாளிகளுக்கு ரூ.48 லட்சத்து 27 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும், காவல்துறை மற்றும் அரசு ஊழியர் களில் சிறப்பாக பணியாற்றிய 147 பேருக்கு கேடயம், சான்றிதழ்களையும் கலெக்டர் வீர ராகவராவ் வழங்கினார்.

இந்தஆண்டுநடந்த அரசு சித்திரைப்பொருட்காட்சியில் சிறந்த அரங்கு அமைத்ததற்காக அரசுத்துறை பிரிவில் தோட்டக்கலைத்துறை, காவல்துறை, வேளாண்மைத்துறை ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களைபெற்றன. அரசு சார்பு பிரிவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மதுரை மாநகராட்சி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் முறையே முதல் 3 இடங்களை பிடித்தன. இவர்களுக்கான கேடயங்களையும் கலெக்டர் கொடுத்தார்.

விழாவையொட்டி ஓ.சி.பி.எம் பெண்கள், தனக்கன்குளம் அரசு கள்ளர், திருநகர் சீதாலெட்சுமி பெண்கள், தெப்பக்குளம் மீனாட்சி சுந்தரேஷ்வரர், யா.ஒத்தக்கடை அரசு பெண்கள், சித்து மெட்ரிக் மேல்நிலைபள்ளிக்கூடங்களின் மாணவிகள் மற்றும் யாதவா, லேடிடோக் கல்லூரி மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தேசிய பக்தி பாடல் நடனம், தப்பாட்டம், யோகா, தன்னம்பிக்கை பாடல் நடனம், கிராமிய நடனம், கூட்டு உடற்பயிற்சி, குடை நடனம், ஜிம்னாஸ்டிக், பாப்பநாயக்கன்பட்டி ஸ்ரீகந்தசாமி வித்யாலயா மாணவர்களின் சாகச நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட 1,700 மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், விழாவை ஒருங்கிணைத்து நடத்திய அலுவலர்களுக்கு கேடயங்களையும் கலெக்டர் வழங்கினார். விழாவில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சைலேஷ்குமார்யாதவ், மதுரை சரக டி.ஐ.ஜி.பிரதீப் குமார், போலீஸ்கமிஷனர் மகேஷ்குமார்அகர்வால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மதுரை எல்லீஸ்நகரில் உள்ள சிவகாசி நாடார்கள் மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக மண்டல தலைவர் வீரமணி கலந்து கொண்டு தேசிய கொடியேற்றினார். இதில் பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர் மற்றும் சிவகாசி நாடார்கள் உறவின்முறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மதுரை தெற்கு வாசல் நாடார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி குழுத்தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். உறவின்முறை தலைவர் கணபதி முன்னிலை வகித்தார். பள்ளி செயலர் குணசேகரன் வரவேற்றார். தென்னக ரெயில்வே ஓய்வுபெற்ற டிவிசனல் மேலாளர் லெனின்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். விழாவில் உறவின்முறை செயலர் வேல்ராஜ், துணை செயலர் மாடசாமி, பொருளாளர் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அவனியாபுரம் கல்குளம் எஸ்.பி.ஜே. மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கணேசன் தேசிய கொடியேற்றினார். மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் ஆதி ஞானகுமரன் தலைமையில் விழா நடந்தது. மதுரை பாலமந்திரம் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி செயலாளர் சோமசுந்தரம் தேசிய கொடியேற்றினார். திருப்பரங்குன்றம் அமிர்தா வித்யாலயம் பள்ளியில் கோகுலாஷ்டமி மற்றும் சுதந்திர தினவிழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் மகேஷ்குமார் தேசிய கொடியேற்றினார். அ.வெள்ளாளப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். வில்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியை சிவகாமி தேசிய கொடியேற்றினார்.

கே.புதூர் லூர்தன்னை ஆலயத்தில் நடைபெற்ற விழாவில் பாதிரியார் தாஸ்கென்னடி கொடியேற்றினார். மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள காமராஜர் பல்கலைகழக கல்லூரியில் நடந்த விழாவில் கல்லூரி முதல்வர் இருளப்பன் தேசிய கொடியேற்றினார். மதுரை சவுராஷ்டிரா கல்லூரியில், கல்லூரி முதல்வர் ராமலிங்கம், நிர்வாக குழு உறுப்பினர் கிரிதரன் தலைமையில் விழா நடந்தது. மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் விளாங்குடி நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில் முன்னாள் மாணவரும், கருவூல கண்காணிப்பாளருமான வேல்ராஜ் கொடியேற்றினார். திருப்பரங்குன்றம் ஜோதி நடுநிலைப்பள்ளியில், பள்ளி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தேசிய கொடியேற்றினார். மதுரை கீழச்சந்தைப்பேட்டையில் உள்ள திருஞானம் தொடக்கப்பள்ளியில், பள்ளி தலைவர் சுரேந்திரன், செயலாளர் சதாசிவம் தலைமையில் விழா நடைபெற்றது. ஸ்ரீராம் நல்லமணி யாதவ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை கோப்பெருந்தேவி வரவேற்றார்.

மதுரை வடக்கு மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியை மாநில அமைப்பு செயலாளர் முகம்மதுகவுஸ் ஏற்றினார். இதில் மாவட்ட செயலாளர் அப்துல்ரபி, பொருளாளர் அப்பாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து அந்த பகுதியில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பிரசாரம் செய்யப்பட்டது.

Next Story