மோட்டார் சைக்கிளில் சென்றபோது மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்து நிதி நிறுவன ஊழியர் படுகாயம்
எண்ணூர் விரைவு சாலையில் மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்து நிதி நிறுவன ஊழியர் படுகாயம்.
திருவொற்றியூர்,
சென்னை வியாசர்பாடி, சாமியார் தோட்டம் 2-வது தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் தினேஷ் (வயது 28). திருவொற்றியூர் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று எர்ணாவூர் பகுதியில் பணம் வசூலித்து விட்டு மோட்டார் சைக்கிளில் நிறுவனத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
எண்ணூர் விரைவு சாலையில் பட்டினத்தார் கோவில் அருகே வந்தபோது திடீரென சாலையின் நடுவே பறந்து வந்த மாஞ்சா நூல் காற்றாடி தினேஷின் கழுத்தின் மீது விழுந்து அறுத்தது. இதனால் படுகாயம் அடைந்த தினேஷ் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவரை மீட்டு திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story