அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தில் தபால் தலை நிரந்தர கண்காட்சி


அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தில் தபால் தலை நிரந்தர கண்காட்சி
x
தினத்தந்தி 16 Aug 2017 7:15 AM IST (Updated: 16 Aug 2017 3:28 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தில் நிரந்தர தபால் தலை கண்காட்சி தொடங்கியது. மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

சென்னை,

சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் சென்னை நகர மண்டல தபால்துறை தலைவர் ஆர்.ஆனந்த் தேசிய கொடி ஏற்றினார். தபால்துறை தலைவர் (மின்னஞ்சல்-தொழில் வளர்ச்சி) டி.வெங்கடாச்சலம், இயக்குனர்கள் ஏ.கோவிந்தராஜன், ஏ.சரவணன் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். தபால்துறை ஊழியர்களும் தங்கள் குடும்பத்தினருடன் விழாவில் பங்கேற்றனர். பள்ளி மாணவ-மாணவிகளும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

முன்னதாக சுதந்திர தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற தபால் துறை ஊழியர்களுக்கு ஆர்.ஆனந்த் பரிசு வழங்கி கவுரவித்தார்.

நிரந்தர கண்காட்சி

சுதந்திர தினத்தையொட்டி அலுவலக வளாகத்திலேயே நிரந்தர தபால் தலை கண்காட்சி தொடங்கப்பட்டது. இந்த கண்காட்சியை சென்னை நகர மண்டல தபால்துறை தலைவர் ஆர்.ஆனந்த் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். கண்காட்சியில் சுதந்திர போராட்டம் தொடர்பாக அரசால் வெளியிடப்பட்ட பல அரிய தபால் தலைகள் இடம்பெற்றிருந்தன. இதனை மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். தபால் தலைகள் குறித்து ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

பின்னர் இக்கண்காட்சி குறித்து ஆர்.ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

7 ஆயிரம் தபால் தலைகள்

பள்ளி மாணவர்கள் இடையே தபால் தலை சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிரந்தர கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சியில் 7 ஆயிரம் தபால் தலைகள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தலைப்புகளில் கண்காட்சி நடத்தப்படும். தபால் தலை சேகரிப்பு குறித்து பள்ளிகளிலும் தபால் துறை சார்பில் பயிற்சி விளக்கம் அளிக்கப்பட உள்ளது. அடுத்த 4 மாதத்தில் சென்னையில் 100 பள்ளிகளில் இந்த நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சனிக்கிழமை உள்பட எல்லா வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story