விழுப்புரம் அருகே கார், ஆம்னி பஸ் மீது மோதல்: கணவன்–மனைவி உள்பட 4 பேர் பலி


விழுப்புரம் அருகே கார், ஆம்னி பஸ் மீது மோதல்: கணவன்–மனைவி உள்பட 4 பேர் பலி
x
தினத்தந்தி 15 Aug 2017 10:30 PM GMT (Updated: 15 Aug 2017 10:13 PM GMT)

ஆன்மிக சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது தறிகெட்டு ஓடிய கார், தனியார் ஆம்னி பஸ் மீது மோதியதில் கணவன்–மனைவி உள்பட 4 பேர் பலியானார்கள்.

விழுப்புரம்,

உத்தரபிரதேச மாநிலம் அசம்கார் மாவட்டத்தை சேர்ந்தவர் சோப்நாத் பிரஜபதி (வயது 40). இவர் அங்குள்ள மின்வாரிய அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல முடிவு செய்தார்.

அதன்படி கடந்த 4–ந் தேதி உத்தரபிரதேசத்தில் இருந்து ஒரு காரில் சோப்நாத் பிரஜபதி, அவரது மனைவி சாதனா (35), மகன் சுமித் (15) மற்றும் சாதனாவின் தந்தை முனிலால் (65) ஆகிய 4 பேரும் புறப்பட்டனர். காரை ராகுல்சிங் (26) என்பவர் ஓட்டினார். மாற்று டிரைவராக தினேஷ்யாதவ் (35) இருந்தார்.

இவர்கள் முதலில் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதுரை, கன்னியாகுமரி, ராமேசுவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

ஆன்மிக சுற்றுலாவை முடித்த இவர்கள் நேற்று முன்தினம் இரவு ராமேசுவரத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்திற்கு புறப்பட்டனர். இவர்களது கார் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூரை அடுத்த இருவேல்பட்டு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.

இந்த கார் திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருவேல்பட்டு ஏரிக்கரை வளைவில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் ஏறி மறுபக்க சாலையில் நுழைந்து தறிகெட்டு ஓடியது.

அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் தனியார் ஆம்னி பஸ் அந்த வழியாக வந்தது. கார் தறிகெட்டு வருவதை பார்த்த பஸ் டிரைவர் திடீரென ‘பிரேக்’ போட்டார். அதற்குள் ஆம்னி பஸ் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.

இதில் முனிலால், அவரது மகள் சாதனா ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே காருக்குள் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். சோப்நாத் பிரஜபதி, அவரது மகன் சுமித் மற்றும் கார் டிரைவர் ராகுல்சிங், மாற்று டிரைவர் தினேஷ்யாதவ் ஆகிய 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தனர்.

தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 4 பேரையும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதேபோல் பஸ்சில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த ரிஷிகுமாரும் (21) காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சோப்நாத், டிரைவர் ராகுல்சிங் ஆகியோர் சிறிது நேரத்திலேயே இறந்தனர்.

சோப்நாத்தின் மகன் சுமித் மற்றும் மாற்று டிரைவர் தினேஷ்யாதவ், பஸ் பயணி ரிஷிகுமார் ஆகியோர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் சுமித்தின் தாய், தந்தை மற்றும் தாத்தா முனிலால் ஆகிய 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். அவர்களின் உடலை பார்த்து சிறுவன் சுமித் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story