ரூ.1 லட்சம் வாங்கிக்கொண்டு கைதியை, மனைவியுடன் ஓட்டலில் தங்க அனுமதித்த போலீசார்


ரூ.1 லட்சம் வாங்கிக்கொண்டு கைதியை, மனைவியுடன் ஓட்டலில் தங்க அனுமதித்த போலீசார்
x
தினத்தந்தி 15 Aug 2017 11:30 PM GMT (Updated: 2017-08-16T04:59:55+05:30)

ரூ.1 லட்சம் வாங்கிக்கொண்டு கைதியை, மனைவியுடன் ஓட்டலில் தங்க போலீசார் அனுமதித்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

மும்பை,

சிட்கோ ஊழியரை கடத்தி கொலை செய்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஹனுமன் பாட்டீல்(வயது30) என்பவர் மும்பை தலோஜா ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் சிகிச்சைக்காக ஜே.ஜே. ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்ட போது தப்பிச்சென்றார். இதுகுறித்து போலீசார் நடத்திய துறை ரீதியான விசாரணையில் சில அதிர்ச்சி தகவல் வெளியாகின.

அதாவது, சம்பவத்தன்று சிறை போலீசார் ஹனுமன் பாட்டீலை ஜே.ஜே. ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது கைதி தன் மனைவியை பார்க்க ஏற்பாடு செய்யும்படியும், அதற்கு பணம் தருவதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் ஹனுமன் பாட்டீலின் மனைவி மோனாலியை, கிராண்டு ரோட்டில் உள்ள ஓட்டலுக்கு வரும்படி கூறியுள்ளனர். கைதியையும் ஓட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்றதும் ஹனுமன் பாட்டீல் தன் மனைவியுடன் தனியே பேச விரும்புவதாக கூறியுள்ளார்.

ரூ.1 லட்சம்

இதையடுத்து அவர்கள் இருவரையும் ஓட்டல் அறையில் தனியே சந்தித்து பேச அனுமதித்த போலீசார், மனைவியுடன் சில மணிநேரங்கள் தங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளனர். ஆனால் அறைக்கு சென்ற கைதி அங்கிருந்த ஜன்னல் வழியாக தப்பி சென்றுவிட்டார். இந்த தகவல்கள் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இது மிகப்பெரிய குற்றமாகும். தவறு செய்த அனைத்து போலீசாரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். தப்பியோடிய ஹனுமன் பாட்டீல் கடந்த மாதம் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். 

Next Story