நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்: ஜவாஹிருல்லா


நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்: ஜவாஹிருல்லா
x
தினத்தந்தி 16 Aug 2017 5:30 AM IST (Updated: 16 Aug 2017 5:21 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று கோவையில் மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.

கோவை,

கோவை வடக்கு மாவட்ட கிணத்துக்கடவு பகுதி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக ஆத்துப்பாலம் கிளை சார்பில் அலுவலகம் திறப்பு விழா, இலவச மருத்துவ சேவை மையம் திறப்பு விழா நடந்தது. கிளை அலுவலகத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில செயலாளர் உம்மர் திறந்து வைத்தார். மருத்துவ சேவை மையத்தை மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நீட தேர்வில் இருந்து தமிழகம் மட்டும் விலக்கு கேட்பதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் தான் சமூகநீதி உள்ளது. இங்கு தான் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் தான் மற்ற மாநிலங்களைவிட அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ளன.

நம் மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் வெளிமாநில மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்ந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கப்படுகிறது. அதை நிரந்தரமாக பெற்றுத் தர மத்திய, மாநில அரசுகள் தவறி தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விட்டன. நீட் தேர்வுக்கு ஒரு ஆண்டு மட்டுமல்லாமல் நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் கோரிக்கை.

அ.தி.மு.க.வின் 3 அணிகளும் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசிடம் சரண் அடைந்து விட்டன. பா.ஜனதாவிடம் அ.தி.மு.க. அடகு வைக்கப்பட்டு விட்டது. எடப்பாடி பழனிசாமி அரசினால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. நெடுவாசல், கதிராமங்கலத்தில் போராடும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு தவறி விட்டது.

தமிழகத்தில் தொழில்கள் நலிவடைந்து வருகின்றன. இந்த ஆட்சி பதவியில் இருக்கும் ஒவ்வொரு நாளும் பின்னடைவு தான். எனவே நாட்டு மக்களுக்கு எந்த பலனையும் அளிக்காத எடப்பாடி பழனிசாமி அரசு அகற்றப்பட வேண்டும். மீண்டும் சட்டசபை தேர்தலை நடத்தி புதிய அரசை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது ஜெமேஷா பாபு, அரசன் அப்பாஸ், இப்ராகிம், காதர் உசேன், ஜெம்பாபு, ஜாபர் சாதிக், செய்தி தொடர்பாளர் ஆசிக்அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றினார்.


Next Story