வரலாறு கண்டிராத நெடும் பயணம்


வரலாறு கண்டிராத நெடும் பயணம்
x
தினத்தந்தி 16 Aug 2017 9:00 AM GMT (Updated: 16 Aug 2017 8:19 AM GMT)

சீனாவின் பண்பாட்டுடனும், வரலாற்றுடனும் இணைந்து பிணைந்து வளர்ந்த மாமனிதர் மாசேதுங். ஓர் ஏழை விவசாயக் குடும்பத்தில் 1893-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் நாள் ஷாவோஷான் என்ற கிராமத்தில் பிறந்தார்.

சீனாவின் பண்பாட்டுடனும், வரலாற்றுடனும் இணைந்து பிணைந்து வளர்ந்த மாமனிதர் மாசேதுங். ஓர் ஏழை விவசாயக் குடும்பத்தில் 1893-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் நாள் ஷாவோஷான் என்ற கிராமத்தில் பிறந்தார். ஏழு வயதிலேயே மாசேதுங் வயலில் வேலை செய்யத் தொடங்கினார். எட்டாவது வயதில் படிக்கத் தொடங்கி, பதிமூன்றாவது வயதில் பள்ளியை விட்டு விலகி, மீண்டும் விவசாயத்திற்கே திரும்பினார்.

1934-ம் ஆண்டு அப்போதைய அரசை எதிர்த்து, மாசேதுங் மற்றும் சூஎன்லாய் ஆகியோர் தலைமையில் 1 லட்சம் பேர் சியாங்ஸி மாகாண முற்றுகையில் இருந்து துணிந்து வெளியேறி வடமேற்கே 3000 கி.மீ. தொலைவில் ஸ்ஜெசுவான் பிரதேசத்தை நோக்கிப் பகலிலும், அதிகமாக இரவு நேரத்திலும் மழை, இடி, மின்னல், வெயில் என்று பாராமல் ஓராண்டு நடைபயணத்தை மேற்கொண்டனர். ஆண்டு முழுவதும் நடந்தனர். நாளொன்றுக்கு நடந்த தூரம் 26 மைல்கள்.

நிரந்தரமாகப் பனி மூடியிருந்த 5 மலைத் தொடர்கள் உள்ளிட்ட 18 மலைத் தொடர்களையும், 24 ஆறுகளையும், 62 மாநகரங்கள் மற்றும் நகரங்களையும் அவர்கள் கடந்து சென்றனர். இது உலக வரலாற்றில் ஈடு இணையில்லா நிகழ்ச்சி. வேறு சில பிரதேசங்களில் இருந்தும், செம்படையினர் வடக்கு ஷான்க்சி வந்து சேர்ந்தனர்.

முதல் மாதத்திலேயே 25 ஆயிரம் பேர் மரணமடைந்தனர். காடு, மலை, வனாந்திரப் பிரதேசங்களைக் கடந்து வரும் வழியில் பலர் மாண்டும், புதிதாகப் பலர் சேர்ந்தும், கிராமப்புறப் பிரசாரத்தில் இருபது கோடி மக்களைச் சந்தித்தும், இறுதியில் வெற்றிகரமாக வந்து சேர்ந்து, உலக வரலாற்றில் இணையற்ற வீரகாவியம் படைத்தனர்.

நெடும் பயணத்திற்காகவே மாசேதுங் தன்னுடைய கைப்பெட்டியைத் தூக்கியெறிந்து விட்டார். நெடும் பயணத்தில் புகை பிடிப்பதென்பது ஒரு ஆடம்பரம் என்று கருதப்பட்டதால், சிகரெட்டுகளை துறந்தார். பயணம் தொடங்கியபோது, அவர் மலேரியாவிலிருந்து ஓரளவு குணமாகிக் கொண்டிருந்தார். நலிந்து, மெலிந்து போயிருந்தாலும் ஓய்வுக்காக ஒரு தூக்குப் படுக்கையில் எடுத்துச் செல்லப்பட்ட நேரம் தவிர, மற்ற நேரங்களில் எல்லாம் தனது சக தோழர்களோடு நடந்தே சென்றார்.

பயணம் சென்றவர்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் இருந்தனர். பயணம் தொடங்கியபோது, மாசேதுங்கின் துணைவியார் ஹோ ஜூ சென் கருவுற்றுச் சில மாதங்கள் ஆகியிருந்தன. பயணத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே அவர் குண்டு தாக்குதலில் காயமடைந்தார். அவருடைய உடலில் 25 குண்டுத் துகள்கள் இருந்தன.

சூஎன்லாயின் மனைவி டெங் யிங் காவோ மற்றும் சாய் சேங் ஆகியோர் நெடும் பயணத்தில் இருந்த புகழ் பெற்ற பெண்மணிகள் ஆவர். இருவரும் காச நோயால் துன்புற்றனர். இப்படியாக வரலாறு கண்டிராத இந்த நெடும்பயணம் நடந்து முடிந்தது.

Next Story