வியாபாரி வீட்டில் 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு


வியாபாரி வீட்டில் 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 17 Aug 2017 3:15 AM IST (Updated: 16 Aug 2017 7:59 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடி அருகே பாத்திர வியாபாரி வீட்டில் 15 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

காட்பாடி,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

காட்பாடியை அடுத்த மேல்வடுகன்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 47). இவர் அப்பகுதியில் பாத்திரக்கடை வைத்துள்ளார். இவருடைய மகளுக்கு வருகிற அக்டோபர் மாதம் 4–ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை முனுசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

திருமணத்துக்காக 15 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை முனுசாமி தயார் செய்து பீரோவில் வைத்திருந்தார். முதற்கட்டமாக திருமண பத்திரிக்கை அச்சடித்து, அதனை உறவினர்களுக்கு முனுசாமி குடும்பத்தினர் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முனுசாமி குடும்பத்துடன் காஞ்சீபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு திருமண பத்திரிக்கை கொடுக்க சென்றார். நேற்று காலை முனுசாமி வீட்டிற்கு திரும்பி வந்தார்.

வீட்டின் கதவை திறக்க முயன்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவில் இருந்து பொருட்கள், துணிகள் அறை முழுவதும் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த லாக்கரை உடைத்து, அதில் வைத்திருந்த 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு போயிருந்தது. மேலும் ஹோம் தியேட்டர் உள்ளிட்ட பொருட்களையும் மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர்.

இதுகுறித்து முனுசாமி காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மர்மநபர்களின் கைரேகைகளை சேகரித்தனர்.

இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

மகளின் திருமணத்துக்காக பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் முனுசாமி குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story