மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருவண்ணாமலையில் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோத கொள்கைகளை கண்டித்து திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவண்ணாமலை,
இயற்கை நீர்வளப்பாதுபாப்பு இயக்கம் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோத கொள்கைகளை கண்டித்து திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. தணிக்கை குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
வறட்சியின் காரணமாக தமிழகத்தில் 400–க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் மரணங்களுக்கு வேறு காரணங்களை கூறி மத்திய மாநில அரசுகள் விவசாயிகளை கொச்சைப்படுத்தி உள்ளனர். இதனை விவசாயிகள் சார்பில் கண்டிக்கிறோம். மத்திய அரசு தமிழக மக்கள் மீது ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் போன்ற திட்டங்களை திணிக்கிறது. இதனால் தமிழகம் பாலைவனமாக மாறப்போகிறது. இதனை தமிழக அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்கிறது. மோடியின் ஆட்சிக்கு கீழ் தமிழக அரசு அரசு அடிமையாக உள்ளது. மத்திய மாநில அரசுகள் மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாக திகழ்கிறது. மக்களுக்கு எதிராக கொண்டு வரப்படும் திட்டங்களுக்கு தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார். நீட் விவகாரத்தில் மத்திய அரசு தமிழக மாணவர்களை வஞ்சிக்கிறது. மருத்துவ கல்வி படிக்க விரும்பும் மாணவர்களின் கனவை பொசுக்கிவிடுகிறது. அ.தி.மு.க. ஆட்சியை அவர்களுக்குள்ளேயே போட்டியிட்டு கலைத்துக் கொள்வார்கள். அ.தி.மு.க.வை பாரதீய ஜனதாகட்சி கபளீகரம் செய்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். கரும்பு நிலுவை மற்றும் கரும்புக்கு விலை வழங்காத மத்திய, மாநில அரசுகளில் விவசாய விரோத கொள்கைகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. வேணுகோபால், தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் திருவேங்கடம், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.சேகரன், கிரி, அம்பேத்குமார், தி.மு.க. நிர்வாகிகள், தமிழக விவசாயிகள் நல சங்கத்தினர், தென்னிந்திய கரும்புகள் விவசாயிகள் சங்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்பு மற்றும் சங்கங்களை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.