நாகை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கலெக்டர் பேச்சு


நாகை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 17 Aug 2017 4:00 AM IST (Updated: 17 Aug 2017 2:26 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெத்தி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் சுரேஷ்குமார் கூறினார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் சுதந்திர தின விழாவையொட்டி 434 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதன்ஒரு பகுதியாக நாகை ஒன்றியம் தெத்தி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு, ஊராட்சியின் முன்னேற்றத்திற்கு ஆலோசனைகள் வழங்கினார். முன்னதாக புதிய இந்தியா-2022-ஐ உருவாக்கும் வகையில் கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

பின்னர் கூட்டத்தில் மே-2017 முதல் ஜூலை மாதம் வரை கிராம ஊராட்சி பொது நிதியில் மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை குறித்தும், 2017-18-ம் ஆண்டில் பொதுநிதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், மத்திய அரசின் தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ், திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக மாற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும், பொது சுகாதாரம் மற்றும் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் பராமரிக்கும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு பாராட்டு தெரிவித்தல், பள்ளி கழிவறைகளை சுத்தமாக வைத்திருத்தல், திடக்கழிவு மேலாண்மை, 2017-18-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், மத்திய மாநில அரசு நிதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள், மகளிர் திட்டம் மூலம் சமூக அநீதிகள் மற்றும் வன்கொடுமைகளை எதிர்த்து போராடும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 5 குழுக்களுக்கு விருது வழங்குதல், குடிநீர் சிக்கனம், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவைகள் குறித்து விவாதித்து ஒப்புதல் பெறப்பட்டது.

டெங்கு காய்ச்சல்

கூட்டத்தில் கலெக்டர் சுரேஷ்குமார் பேசியதாவது:- தமிழக அரசு மக்களின் நலனுக்காக எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். சுகாதார குறைபாடு எங்கு அதிகமாக உள்ளதோ, அங்கு நோய் பாதிப்பு உண்டாகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குளம், குட்டைகள் போன்றவை தூர்வாரவும், தோட்டம் அமைக்கவும், கால்வாய் கரைகளை பலப்படுத்தவும், கிராம பொதுமக்களிடம் கருத்தறிந்து பணிகளை செயல்படுத்த வேண்டும். நாகை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 18 முதல் 35 வயது வரை உள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் முழு கல்வி அறிவு பெற்றிருப்பின் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பிற்கு ரூ.50 ஆயிரம் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த கிராமத்தில் வளர்ச்சி திட்டங்களுக்கான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. கிராம மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் உதவி இயக்குனர் (ஊராட்சி) மோகன், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் மதுமதி, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) செல்வகுமார், உதவி கலெக்டர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலர்விழி, கஸ்தூரி, தாசில்தார் ராகவன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story