கிரிக்கெட் விளையாடியபோது தகராறு: வாலிபரை குத்திக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை


கிரிக்கெட் விளையாடியபோது தகராறு: வாலிபரை குத்திக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 25 Aug 2017 1:00 AM GMT (Updated: 2017-08-25T02:21:44+05:30)

கோவையில் கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் வாலிபரை குத்திக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கோவை,

கோவை பாப்பநாயக்கன்பாளையம் செங்காடு பீமநாராயணசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. அவருடைய மகன் ராஜேஷ்குமார் (வயது 21), லேத் ஒர்க்‌ஷாப்பில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர்கள் ராமு என்கிற ராமகிருஷ்ணன் (24), அஜித்குமார் (22), கார்த்திக் (23), சக்திவேல் (23), அருண்பாண்டி (23), மூர்த்தி (23), நவீன் (19). இவர்கள் அனைவரும் நண்பர்கள். விடுமுறை நாட்களில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது வழக்கம்.

இந்த நிலையில் ராஜேஷ்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் அனைவரும் சேர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது ராஜேஷ்குமாருக்கும், ராமுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை நண்பர்கள் சமாதானம் செய்தனர்.

பின்னர் மீண்டும் அவர்கள் விளையாட்டை தொடர்ந்தனர். விளையாடி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்வழியில் ராஜேஷ்குமாருக்கும், ராமுவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
நடந்த சம்பவம் குறித்து ராமு தனது நண்பர்களான அஜித்குமார், கார்த்திக் உள்பட 7 பேரிடம் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 7 பேரும் சேர்ந்து ராஜேஷ்குமாரை தாக்க முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 4-10-2015 அன்று ராஜேஷ்குமார் கோவை ராமகிருஷ்ணா சிக்னல் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ராமு, அஜித்குமார், கார்த்திக், அருண்பாண்டி, சக்திவேல் உள்பட 7 பேர் அங்கு வந்தனர். அவர்கள் ராஜேஷ்குமாரை வழிமறித்து தகராறு செய்தனர்.

பின்னர் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து ராஜேஷ்குமாரை சரமாரியாக அவர்கள் குத்தினர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய ராஜேஷ்குமார், அங்குள்ள ஒரு செல்போன் கடை முன்பு விழுந்தார். ரத்தக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை மீண்டும் அந்த 7 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமு, அஜித்குமார், கார்த்திக், அருண்பாண்டி, சக்திவேல் உள்பட 7 பேரை கைது செய்தனர். பின்னர் இதுகுறித்து கோவை வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி ராமு, அஜித்குமார், கார்த்திக், சக்திவேல், அருண்பாண்டி ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அத்துடன் மூர்த்தி, நவீன் ஆகியோரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்தும் நீதிபதி குலசேகரன் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத் தனர்.

Next Story