கொசுப்புழு ஒழிப்பு பணிகளுக்கு இடையூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை


கொசுப்புழு ஒழிப்பு பணிகளுக்கு இடையூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை
x
தினத்தந்தி 25 Aug 2017 10:30 PM GMT (Updated: 25 Aug 2017 8:43 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் கொசுப்புழு ஒழிப்பு பணிகளுக்கு இடையூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மலர்விழி உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொள்ளை நோய் தடுப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:– மாவட்ட முழுவதும் மழைக்காலம் தொடங்க இருப்பதை முன்னிட்டு காய்ச்சல் கண்காணிப்பு பணிகள் கொசுப்புழு ஒழிப்பு பணிகள், கொசு மருந்து அடிக்கும் பணிகள், ஒட்டு மொத்த துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இப்பணியில் சுகாதாரத்துறை, உள்ளாட்சி துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து ஈடுபட வேண்டும். கொசுப்புழு ஒழிப்பு பணிகளுக்கு இடையூறு செய்பவர்கள் வீடுகளில் கொசுப்புழு உற்பத்தியாகும்படி வைத்திருப்பவர்களுக்கு பொது சுகாதார சட்டம் 1939–ன்படி நோட்டீஸ் வழங்கி சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் காய்ச்சல் கண்டவுடன் அரசு மருத்துவமனைகளில் நேரில் சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் செய்யப்படும் பரிசோதனை மட்டுமே உறுதியானது மற்றும் நம்பத் தகுந்தது. தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பரிசோதனை நம்பத் தகுந்தது அல்ல. மேலும் பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்த்து சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும். குளோரினே‌ஷன் செய்யப்பட்ட குடிநீர் அல்லது காய்ச்சி வடித்த குடிநீரை உபயோகிக்க வேண்டும். கொசுப்புழு ஒழிப்பு பணிகளுக்கு வரும் சுகாதாரத் துறையினருக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மருத்துவத்துறை இணை இயக்குனர் விஜயன்மதமடக்கி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி மற்றும் கல்வித்துறை அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story