தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் மலேசிய மாணவர்களுக்கு பயிலரங்கம் தொடங்கியது


தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் மலேசிய மாணவர்களுக்கு பயிலரங்கம் தொடங்கியது
x
தினத்தந்தி 25 Aug 2017 10:45 PM GMT (Updated: 2017-08-26T03:17:02+05:30)

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் மலேசிய மாணவர்களுக்கு பயிலரங்கம் தொடங்கியது.

தஞ்சாவூர்,

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டு தமிழ் கல்வித்துறை மற்றும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் மலேசிய மாணவர்களுக்கான தமிழ்ப் பண்பாட்டு பயிலரங்கம் தொடக்கவிழா நேற்று நடந்தது. விழாவிற்கு துணைவேந்தர் பாஸ்கரன் தலைமை தாங்கி பேசியதாவது:-

வேர்களை தேடி விழுதுகளாய் நீங்கள்(மலேசிய மாணவர்கள்) இங்கு வந்து இருக்கிறீர்கள். மொழி தான் இனத்தின் அடையாளம். எந்த ஒரு இனத்தின் மொழி அழிகிறதோ, அப்போது அந்த இனம் அழிந்துவிடும். தமிழ்ப் பண்பாடு என்பது தமிழர்களை கட்டி காக்கின்ற பெரிய அரண் என்று சொல்லலாம். பண்பாடு என்று சொன்னால் பல நிலைகளில் நாம் அதனுடைய முழுமையான அர்த்தத்தை தெரிந்து கொள்ளாமல் நாம் சொல்கிறோம், பேசுகிறோம், எழுதுகிறோம்.

பண்பாடு என்பது நம்மோடு பயணிக்கக்கூடிய ஒன்று. பிறந்தது முதல் இறப்பு வரை பண்பாடு என்பதை நாம் அறியாமலேயே, அதனுடைய வீழ்ச்சி தெரியாமலேயே அதோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பண்பாடு என்பது நம் ரத்தத்தோடு ஊறியது என்று சொல்கிறோம். அந்த ரத்தம், தமிழ் ரத்தமாக இருந்தால் தமிழ்ப் பண்பாடாக இருக்கிறது. நம் உயிரோடு, உணர்வோடு கலந்த தமிழ்ப் பண்பாட்டை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் வாழ்வது மலேசியாவாக இருந்தாலும் வாழப்போவது தமிழ்ப் பண்பாட்டுடன் தான்.
இவ்வாறு அவர் பேசினார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் பேசும்போது, மலேசிய நாட்டில் ஆரம்பப்பள்ளியில் இருந்து பல்கலைக்கழகம் வரைக்கும் தமிழில் படிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அரசு பள்ளிகளில் 6 ஆண்டுகள் தமிழ்க் கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. மலேசியாவில் அரசே தமிழ்க் கல்விக்கு பாடப்புத்தகம் முதல் எல்லா செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறது. மலேசியாவில் மாணவர்கள் பரதநாட்டியம் கற்றுக் கொண்டாலும் கூட அவர்களுக்கு அரசு சார்பற்ற நிறுவனங்களின் வழியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழர்களுடைய பண்பாட்டிற்கு துணை புரிகிறது.

தமிழ் மொழியில் இருந்தும், தமிழ்ப் பண்பாட்டில் இருந்தும் இந்த தலைமுறையினர் அன்னியப்பட்டு போவது போல தோற்றம் எங்களுக்கு ஏற்படுகிறது. எனவே இளைஞர்கள், பண்பாட்டை கற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த தலைமுறைக்கு இவர்களே ஆசான்களாக இருந்து ஒரு படையை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

தமிழ்ப் பண்பாட்டு பயிலரங்கத்தை பரசுராமன் எம்.பி. தொடங்கி வைத்தார். இதில் பதிவாளர் முத்துக்குமார், கவிஞர் தங்கம்மூர்த்தி ஆகியோர் பேசினர். விழாவில் மலேசியாவில் இருந்து வந்திருந்த 25 மாணவர்களும், 7 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் துறை தலைவர் குறிஞ்சிவேந்தன் வரவேற்றார். முடிவில் பேராசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார். பின்னர் மாணவர்களுக்கு நாடகப் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிலரங்கம் நிறைவுவிழா இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

Next Story