துறைமுக முகத்துவாரத்தில் மணல் திட்டு: நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்


துறைமுக முகத்துவாரத்தில் மணல் திட்டு: நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்
x
தினத்தந்தி 25 Aug 2017 11:15 PM GMT (Updated: 25 Aug 2017 11:15 PM GMT)

புதுச்சேரி துறைமுக முகத்துவாரத்தில் மணல் திட்டு ஏற்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை துறைமுக முகத்துவாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் மணல் சேர்ந்து மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும். அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டெண்டர்விட்டு முகத்துவாரத்தில் சேரும் வரும் மணல் அகற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முகத்துவாரத்தில் உள்ள மணலை தூர்வாரும் பணி கவர்னரின் தலையீட்டால் மத்திய அரசின் டிரெஜிங் கார்பரே‌ஷன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ரூ.14 கோடி செலவில் 3 லட்சம் கியூபிக் மீட்டர் மணலை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

ஆனால் மணல் வாரிக்கப்பலில் பழுது ஏற்பட்டதால் அந்த பணி முடங்கியது. பின்னர் தனியார் நிறுவன மணல்வாரிக்கப்பல் கொண்டு வரப்பட்டு தூர்வாரப்பட்டது. இதற்கிடையே மத்திய அரசின் டிரெஜிங் கார்பரே‌ஷன் நிறுவனத்திற்கு சொந்தமான மணல்வாரிக்கப்பல் சரி செய்யப்பட்டு 2 கப்பல்களும் தூர்வாரும் பணியில் ஈடுபட்டன. மணல் தூர்வாருவதால் சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படுவதாக சில சமூக அமைப்புகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தது. அதனை தொடர்ந்து தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது.

அதனால் துறைமுக முகத்துவாரத்தில் மீண்டும் மணல் தேங்கி மணல் திட்டு உருவானது. எனவே மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து விசைப்படகு உரிமையாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோரிடம் முறையிட்டனர்.

இந்த நிலையில் அமைச்சர் கந்தசாமி நேற்று காலை துறைமுக முகத்துவார பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அன்பழகன் எம்.எல்.ஏ. உடனிருந்தார். அவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே மீன்பிடிக்க சென்ற படகு ஒன்று மணல் திட்டில் சிக்கியது. அதன் பின்னர் மற்றொரு படகின் உதவியுடன் கயிறு கட்டி இழுத்து அந்த படகை மீட்டனர்.

இது குறித்து அமைச்சர் கந்தசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் மணல் தேங்கி இருப்பதால் விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மீனவர்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து காரைக்கால் மார்க் துறைமுக நிறுவனத்தின் மூலம் புதுச்சேரி மீன்பிடி துறைமுகத்தை தூர்வார பேச்சுவார்த்தை நடத்தினேன். ரூ.3 கோடி செலவில் 75 லட்சம் கியூபிக் மீட்டர் மண் அகற்றப்பட உள்ளது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வருகிற திங்கட்கிழமை மீண்டும் துறைமுக முகத்துவாரத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story