சதுர்த்தி விழா கொண்டாட்டம்: தங்கக் கவசத்தில் மணக்குள விநாயகர் தரிசனம்


சதுர்த்தி விழா கொண்டாட்டம்: தங்கக் கவசத்தில் மணக்குள விநாயகர் தரிசனம்
x
தினத்தந்தி 25 Aug 2017 11:20 PM GMT (Updated: 2017-08-26T04:50:36+05:30)

சதுர்த்தி விழாவை முன்னிட்டு தங்கக் கவசத்தில் மணக்குள விநாயகர் தரிசனம் அளித்தார். நீண்ட வரிசையில் நின்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

புதுச்சேரி,

நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரியிலும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து மூலவரும், உற்சவரும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு காட்சி அளித்தனர்.

அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். புதுவைக்கு சுற்றுலா வந்து இருந்த வெளியூரைச் சேர்ந்தவர்களும் சாமியை தரிசித்தனர். தொடர்ந்து மாலையிலும் இரவிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மணக்குள விநாயகரை தரிசித்து வழிபட்டனர். சிரமமின்றி பக்தர்கள் விநாயகரை தரிசிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

முதல்–அமைச்சர் நாராயணசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் காலை 8 மணிக்கு மணக்குள விநாயகர் கோவிலுக்குச் சென்றனர். அவர்களை கோவில் அறங்காவல் குழு தலைவர் ராமச்சந்திரன், நிர்வாக அதிகாரி வெங்கடேசன் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். கோவில் கருவறைக்குள் சென்ற முதல்–அமைச்சர் நாராயணசாமி பய பக்தியுடன் சாமி கும்பிட்டார்.

கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு இடைவிடாமல் லட்டு மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை உச்சிகால பூஜை நடந்தது. இரவில் சாமி வீதி உலா நடந்தது. விழாவை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோவிலில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள கற்பக விநாயகர் கோவில், கணபதி நகர் பெரியாண்டவர் கோவில், திருவள்ளுவர் நகர் குரு வேலாயுதம் ஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகளில் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வைத்து இருந்தனர். அவல், பொரி மற்றும் பழங்கள், அருகம்புல் ஆகியவற்றை படையலாக வைத்து, பூக்களால் அலங்காரம் செய்தது விநாயகரை வழிபட்டனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மார்க்கெட் உள்பட முக்கியமான வீதிகளில் நேற்று தற்காலிக கடைகள் முளைத்திருந்தன. அங்கு பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. கூட்டம் கூட்டமாக வந்து பொதுமக்கள் பொருட்களை வாங்கிச் சென்றனர். இதனால் அந்த இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.


Next Story