டெங்குவை தடுக்க காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே சிகிச்சை பெறவேண்டும் மருத்துவ அதிகாரி வேண்டுகோள்


டெங்குவை தடுக்க காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே சிகிச்சை பெறவேண்டும் மருத்துவ அதிகாரி வேண்டுகோள்
x
தினத்தந்தி 26 Aug 2017 10:15 PM GMT (Updated: 26 Aug 2017 6:18 PM GMT)

டெங்குவை தடுக்க காய்ச்சல் அறிகுறி இருந்தால் உரிய சிகிச்சை பெறவேண்டும் என்று பொதுமக்களுக்கு மருத்துவ அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொண்டி,

திருவாடானை தாலுகா திருவெற்றியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ராமநாதபுரம் சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் குமரகுருபரன், திருவாடானை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சங்கரன் ஆகியோர் உத்தரவின் பேரில் காரங்காடு ஊராட்சியில் பள்ளி மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை சூசை மேரி தலைமை தாங்கினார்.

இதில் அரசு மருத்துவ அதிகாரி டாக்டர் ரேகா கலந்துகொண்டு டெங்கு காய்ச்சலை தடுக்க பொதுமக்கள் தங்களது வீடுகளில் உடைந்த பாத்திரங்கள், பாட்டில்கள், தேங்காய் சிரட்டை, ஆட்டுக்கல் போன்றவைகளில் தண்ணீர் தேங்கி கிடந்தால் உடனே தண்ணீரை அகற்ற வேண்டும்.

வீடுகளிலும் வீடுகளை சுற்றிலும் கழிவு பொருட்கள் தேங்காமல் பார்த்துகொள்ள வேண்டும். தண்ணீரை கொதிக்க வைத்து ஆறவைத்து குடிக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் கடைகளிலோ, தனி நபர்களிடமோ மாத்திரைகள் வாங்கி சாப்பிடாமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று டாக்டர்களிடம் உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். வீடுகளின் மேல்மாடிகளில் கழிவு பொருட்களை போட வேண்டாம்.

மாடிகளில் தண்ணீர் தொட்டிகள் இருந்தால் அதனை மூடிபோட்டு மூடி வைக்க வேண்டும். வாரம் ஒருமுறை அதனை சுத்தம் செய்து கிருமி நாசினி மருந்துகள் தெளிக்க வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளை வழங்கினார். இதில் சுகாதார ஆய்வாளர் சந்தனராஜ், ஊராட்சி செயலாளர், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு டெங்கு தடுப்பு பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து ஊராட்சியில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.


Next Story