பட்டினப்பாக்கத்தில் கடல் சீற்றத்தால் தூக்கி வீசப்பட்டு சிதறிக்கிடக்கும் கற்கள்


பட்டினப்பாக்கத்தில் கடல் சீற்றத்தால் தூக்கி வீசப்பட்டு சிதறிக்கிடக்கும் கற்கள்
x
தினத்தந்தி 27 Aug 2017 4:04 AM IST (Updated: 27 Aug 2017 4:04 AM IST)
t-max-icont-min-icon

கடல் சீற்றத்தால் பட்டினப்பாக்கத்தில் ராட்சத அலைகளால் தூக்கி வீசப்பட்ட கற்கள் கடற்கரை பகுதியில் சிதறிக்கிடக்கின்றன. விநாயகர் சிலைகளை கரைக்க உள்ள இடத்தில் இருக்கும் அந்த கற்களை உடனடியாக அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் குடியிருப்பு உள்ளது. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். சில நாட்களாக இங்கு கடல் அலை சீற்றம் காரணமாக கடற்கரையோர பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. கடலோரத்தில் ஒரு சில தெருக்களில் உள்ள வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொருட்கள் சேதம் அடைந்தன. கடல் அலையால் இழுத்து வரப்பட்ட குப்பைக்கூளங்கள் வீடுகளுக்குள் குவிந்தன.

சீனிவாசபுரத்தில் கடற்கரை பகுதியில் விநாயகர் சிலைகளை கரைக்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்காக அங்கு ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்படும். விநாயகர் சிலைகளை கொண்டு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு கடற்கரை பகுதியில் சிறிது தூரம் சாலை அமைக்கப்பட்டு இருந்தது.

பசுமை தீர்ப்பாயம் உத்தரவால் கடற்கரையில் அமைக்கப்பட்ட சாலை இடிக்கப்பட்டது. அந்த கற்கள் கடலில் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த கற்கள் கடல் சீற்றத்தால் கடற்கரையில் தூக்கி வீசப்பட்டு சிதறிக்கிடக்கின்றன. விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு ஏதுவாக கடற்கரையில் சிதறி கிடக்கும் கற்களை, உடனடியாக அகற்ற வேண்டும் என்று விநாயகர் சிலை அமைப்பாளர்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
1 More update

Next Story