சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி கோழிப்பண்ணையை அகற்றக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்


சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி கோழிப்பண்ணையை அகற்றக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2017 5:15 AM IST (Updated: 31 Aug 2017 1:22 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை அருகே சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் கோழிப்பண்ணையை அகற்றக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

பெருந்துறை,

பெருந்துறை அருகே பெரியவீரங்கிலியில் 7 லட்சம் எண்ணிக்கை கொண்ட தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 200–க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10 மணி அளவில் இந்த கோழிப்பண்ணை முற்றுகையிடுவதற்காக வந்தார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை தாசில்தார் செந்தில்ராஜ், திங்களூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘பெரியவீரங்கிலியை சுற்றி வடமலைகவுண்டன்பாளையம், கைக்கோளபாளையம், சின்னவீரசங்கிலி, கோடாபுலியூர், கிண்கிணிபாளையம் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். பெரியவீரசங்கிலியில் கடந்த 20 ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணை இயங்கி வருகிறது.

இந்த கோழிப்பண்ணையின் கழிவுகளால் ஏற்படும் ஈக்களால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. குடிநீர், உணவுப்பொருட்கள் மீது உட்கார்ந்து விடுகிறது. இதனால் உணவுப்பொருட்கள், குடிநீர் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ என எதையும் செய்ய முடியவில்லை. ஈக்கள் கடிப்பதால் கால்நடைகளும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

பெரியவீரசங்கிலியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு விவசாயிகள் ஊற்றும் பால் கேன்களில் ஈக்கள் செத்து மிதக்கின்றன. இந்த பால்தான் சித்தோடு பால் பண்ணைக்கு அனுப்பப்படுகிறது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே கோழிப்பண்ணையை அகற்றக்கோரி கடந்த 19 ஆண்டுகளாக சாலை மறியல், உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.

மேலும் கால்நடை துறை, சுகாதாரத்துறை, சுற்றுச்சூழல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்காலிக தீர்வு கூறி எங்களை சமாதானப்படுத்தி வந்தார்கள். எனவே உடனடியாக சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வரும் கோழிப்பண்ணையை அகற்ற வேண்டும்’ என்றனர்.

அதற்கு தாசில்தார், ‘நீங்கள் மதியம் 1 மணி அளவில் பெருந்துறை தாலுகா அலுவலகத்துக்கு வாருங்கள். அங்கு வைத்து கோழிப்பண்ணை அதிபர், அரசு அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்ந்து கொள்ளலாம்.’ என்று கூறினார்.

அதை பொதுமக்கள் ஏற்க மறுத்தார்கள். அதிகாரிகள் இங்கு வந்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து தாசில்தார் அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் பொதுமக்கள், கோழிப்பண்ணையை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்று கூறி கோழிப்பண்ணை தீவன ஆலை முன்பு உட்கார்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story